Saturday, July 22, 2006

11.பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா?

"இனிமேல் வரும் ஒவ்வொரு பாகிஸ்தானிய அரசும் அதற்கு முந்தைய அரசை விட மோசமானதாகவே இருக்கும்" என்று தனது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்பு கணித்தார் ஜின்னா.தேசத்தந்தையின் அந்த வாக்கை மெய்யாக்க பாகிஸ்தானிய அரசுகள் தவறவே இல்லை :-)பாகிஸ்தானின் புகழ்பெற்ற எழுத்தாளரான கவ்சாஜி சொல்வதுபோல் "ஜின்னா அந்த வரிகளை மிக உறுதியுடனும்,எதிர்காலம் பற்றிய சிறந்த ஞானத்துடனும் சொன்னார்"

காஷ்மீர் குறித்த இரு அரசுகளின் நிலைப்பாட்டை,போர்த்தந்திரங்களை அலசி ஆராய்ந்தால் பாகிஸ்தானின் ராஜதந்திரங்களை இந்திய அரசு எதிர்கொண்டு முறியடித்த கதைகள் தெரியவரும்.இந்தியாவில் மத்திய அரசுகள் மாறி,மாறி வந்தபோதும் காஷ்மீர் குறித்த அவற்றின் கொள்கைகள் மாறுவதே கிடையாது.தமிழக அரசியலை பிடித்திருக்கும் சாபக்கேடான அரசியல் விரோதம் மத்திய அரசியலில் இல்லை என்பது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம்.

காஷ்மீரை யுத்தம் மூலம் அடையவே முடியாது என்பது பாகிஸ்தானுக்கு 1965,1971 யுத்தங்கள் முடிந்தபின் தான் தெரியவந்தது என்று சொன்னால் அதிசயமாக இருக்கும்.ஆனால் அதுவரை பாகிஸ்தானிய அரசு அப்படி ஒரு நம்பிக்கையை தான் தன் மக்களுக்கு ஊட்டிக்கொண்டிருந்தது."1 பாகிஸ்தானிய சிப்பாய் 10 இந்திய சிப்பாய்களுக்கு சமம்" என்று பெருமை பேசி இந்தியாவின் ராணுவ வலிமையை குறைத்து மதிப்பிடும் செயலை பாகிஸ்தான் அரசு செய்தது.மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட சொல்லப்பட்ட அந்த வாசகத்தை அரசும் ராணுவமும் நம்பியதுதான் பரிதாபம்.1965ல் முதல் ஆப்பை வாங்கிய பாகிஸ்தான் ராணுவம் அதன்பின் அம்மாதிரி சொல்லுவதை குறைத்துக்கொண்டது.

1971ல் நடந்த யுத்தம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய முக்கிய காய்நகர்த்தல்.இந்திரா காந்தி அப்போது காட்டிய ராஜதந்திரமும்,விவேகமும் பிரமிப்பை ஊட்டுபவை.பாகிஸ்தான் மிக பலவீனமாக இருந்த நேரத்தில்,பாகிஸ்தான் ராணுவத்தின் பெரும்பகுதி பங்களாதேஷில் இருந்த நேரத்தில் போரை துவக்கி வெறும் பதினாறு நாளில் பாகிஸ்தான் ராணுவத்தை சரணடைய செய்தார்.பாகிஸ்தான் தனது பாதி நிலப்பரப்பை அன்று இழந்தது.

நிலப்பரப்பு போனது என்பதை விட பல சோகங்கள் பாகிஸ்தானுக்கு நிகழ்ந்தன.சீனா உதவிக்கு வரும்,அமெரிக்கா உதவிக்கு வரும் என பாகிஸ்தான் தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தது.ஆனால் அமெரிக்காவோ சீனாவோ இந்தியாவை தாக்கினால் சோவியத் யூனியன் இந்தியாவின் உதவிக்கு வரும் என்ற உறுதியை இந்திரா பெற்றிருந்தார்.அதனால் அமெரிக்காவின் 7வது கடற்படை பாகிஸ்தானுக்கு உதவிக்கு வரும் என்ற பகல்கனவு தகர்ந்து போனது.

அப்போது எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை எல்லையாக ஏற்க வாயளவில் ஒரு ஒப்பந்தம் இந்திரா,பூட்டோவால் போடப்பட்டு பூட்டோ கெஞ்சியதால் கைவிடப்பட்டது.அதை ஒப்பந்தமாக போடாதது இந்தியா செய்த ஒரு ராஜதந்திர தவறு என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.வெற்றிக்களிப்பில் இந்திராகாந்தி அந்த தவற்றை செய்தார்.

1971 முடிந்தபின் பாகிஸ்தானில் நிலவிய சோகத்துக்கு எல்லையே இல்லை.அது சாதாரண தோல்வி அல்ல.கம்பர் சொல்லுவதுபோல்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்

என்பதுபோல் புகழ்,மானம்,வீரம் அனைத்தையும் பங்களாதேஷில் தொலைத்துவிட்டு போர்க்கைதிகளாய் 90,000 படைவீரர் இந்திய சிறையிலிருக்க வளையல் அணிந்த ஒரு பெண்ணிடம் தலைகுனிந்து ஒப்பந்தம் போட்டு கெஞ்சி கூத்தாடி தன் படைவீரரை காப்பாற்றி அழைத்துக்கொண்டு போன அந்த கேவலத்தை பாகிஸ்தானிய அரசால்,அதன் ராணுவத்தால்,அதன் உளவு அமைப்புக்களால் இன்றுவரை மறக்க முடியவில்லை.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு,தன் ராணுவம் இந்தியாவுக்கு நிகரில்லை, தான் சர்வதேச அரசியலில் தனிஆள் என்ற நிதர்சனம் பாகிஸ்தானை வாட்டியது.

இந்தியாவுக்கு அடிகொடுக்க வேண்டும்,பங்களாதேஷில் தனக்கு நடந்ததை தான் இந்தியாவுக்கு காஷ்மீரில் செய்ய வேண்டும் என்ற வெறி பாகிஸ்தானிய ராணுவத்திடமும்,உளவு அமைப்புக்களிடமும் அதன்பின் புகுந்தது.

(தொடரும்)

11 Comments:

கால்கரி சிவா said...

வாங்க செல்வன், அள்ளி தருக.

என்னுடைய பதிவில் வந்து பாகிஸ்தானிடம் நாம் சண்டையிட்டால் நாம் தோற்க வாய்ப்புகள் உண்டு என்று சொல்லும் அன்பர்களுக்கு ஒரு கண்திறப்பு பதிவாக அமையட்டும்

Unknown said...

/என்னுடைய பதிவில் வந்து பாகிஸ்தானிடம் நாம் சண்டையிட்டால் நாம் தோற்க வாய்ப்புகள் உண்டு என்று சொல்லும் அன்பர்களுக்கு.../

அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கட் அணியை பற்றி சொல்லியிருப்பார்கள் சிவா.:-)இப்போது கிரிக்கட்டில் கூட நிலைமை மாறிவருகிறது.

நாமக்கல் சிபி said...

$elvan,
அன்று இந்திரா செய்த தவறு POKவை திரும்ப கொடுத்ததுதான்.

சிவா,
//பாகிஸ்தானிடம் நாம் சண்டையிட்டால் நாம் தோற்க வாய்ப்புகள் உண்டு என்று சொல்லும் அன்பர்களுக்கு //
கணவிலும் நடக்காது என்று சொல்லுங்கள்.

நாமக்கல் சிபி said...

///என்னுடைய பதிவில் வந்து பாகிஸ்தானிடம் நாம் சண்டையிட்டால் நாம் தோற்க வாய்ப்புகள் உண்டு என்று சொல்லும் அன்பர்களுக்கு.../

அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கட் அணியை பற்றி சொல்லியிருப்பார்கள் சிவா.:-)இப்போது கிரிக்கட்டில் கூட நிலைமை மாறிவருகிறது.

//

அருமை.

Unknown said...

பாலாஜி

POK இந்திரா 1971ல் தரவில்லை.1948ல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து பிடித்த பகுதி அது.அதை திருப்பித்தர இந்திய அரசு பலமுறை கேட்டும் இன்னும் பாகிஸ்தான் அதை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது.

நாமக்கல் சிபி said...

$elvan,
//POK இந்திரா 1971ல் தரவில்லை//
தெரியும்.
1947ல் காஷ்மீர் மன்னர் தனி நாடு விரும்புவதாக சொல்லி இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுடனும் சேராமல் இருந்தார்.

ஹைதாராபாத் நிஜாம் முஸ்லீமாக இருந்தாலும் மக்கள் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்ததால் அவரை இந்தியாவுடன் சேர செய்தார் பட்டேல்.

அந்த காரணத்தை சொல்லி காஷ்மீரை தன்னுடன் சேர்த்துக் கொள்ள முயன்றது பாகிஸ்தான். (காஷ்மீரில் மன்னர் இந்து பெரும்பாலான மக்கள் முஸ்லிம்) ஆனால் பாகீஸ்தானுடன் சேர காஷ்மீர் மன்னருக்கு விருப்பமில்லை.

ஜின்னாவிற்கும் காஷ்மீர் மன்னருக்கும் ஏற்பட்ட இந்த பனிப்போர், போரில் முடிந்தது. 1948ல் காஷ்மீர் மேல் போர் தொடத்தது பாகிஸ்தான்.

இந்த சமயத்தில் வேறு வழியில்லாமல் சில நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் சேர சம்மதித்தது காஷ்மீர். ஆனால் அந்த சமயத்தில் பாகிஸ்தான் வீரர்கள் காஷ்மீரில் இருந்தனர்.

முதல் போர். புதிதாக பிறந்த இந்தியா உலக நாடுகளிடம் நல்லப் பேரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் UNOவிற்கு எடுத்து சென்றது.

காஷ்மீரில் பாதி தூரம் வரை பாகிஸ்தான் வீரர்கள் போரில் தோற்று பின் வாங்கியிருந்தனர். இதையே எல்லையாக வகுத்தது UNO. அப்போது உருவானதுதான் POK.

இரண்டாவது போரிலாவது இதை மீட்டிருக்கலாம் :-(

நான் சொன்னதுல தவறிருந்தால் திருத்தவும்.

Unknown said...

//1947ல் காஷ்மீர் மன்னர் தனி நாடு விரும்புவதாக சொல்லி இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுடனும் சேராமல் இருந்தார்.//

சரியான தகவல்

//ஹைதாராபாத் நிஜாம் முஸ்லீமாக இருந்தாலும் மக்கள் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்ததால் அவரை இந்தியாவுடன் சேர செய்தார் பட்டேல்//

இந்துக்கள் என்பதால் அல்ல.அந்த மக்கள் இந்தியாவுடன் சேர விரும்பியதாலும்,ரஜாக்கர்கள் ஐதராபாத் மகக்ளை தாக்கியபோது அம்மன்னர் சரிவர நடவடிக்கை எடுக்காததாலும் மக்களை காக்க இந்தியா தலையிட வேண்டிய அவசியம் வந்தது.ஐதராபாத்தில் கணிசமான அளவு முஸ்லிம்களும் உண்டு.

//அந்த காரணத்தை சொல்லி காஷ்மீரை தன்னுடன் சேர்த்துக் கொள்ள முயன்றது பாகிஸ்தான். (காஷ்மீரில் மன்னர் இந்து பெரும்பாலான மக்கள் முஸ்லிம்) ஆனால் பாகீஸ்தானுடன் சேர காஷ்மீர் மன்னருக்கு விருப்பமில்லை.//

பாகிஸ்தானுடன் சேர காஷ்மீர் மன்னருக்கு மட்டுமல்ல,தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான காஷ்மீர் சிங்கம் பரூக் அப்துல்லாவுக்கும்,காஷ்மீர் மக்களுக்கும் பாகிஸ்தானுடன் சேர சுத்தமாக விருப்பமே இல்லை.

//காஷ்மீரில் பாதி தூரம் வரை பாகிஸ்தான் வீரர்கள் போரில் தோற்று பின் வாங்கியிருந்தனர். //

காஷ்மீரில் ஊடுரிவியது பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமல்ல.பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்ட பழங்குடி படையினர் கணிசமான அளவு அட்டகாசங்களை செய்தனர்.மக்களை,நீதியை,நேர்மையை காக்க இந்தியா தலையிட வேண்டிவந்தது.

//இரண்டாவது போரிலாவது இதை மீட்டிருக்கலாம் :-( //

உண்மை.உண்மை

Hariharan # 03985177737685368452 said...

1971ல் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தானிய 90,000 POW க்களை வைத்துச் சாதுர்யமாக ஒரு நிரந்தர முடிவுக்கு எடுத்து வராமல் விட்டது இன்று காஷ்மீர் வழியாக பாகிஸ்தானில் தீவிரவாதப் பயிற்சி எடுத்த இஸ்லாமிய தீவிர வாதிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்க தோதுவாகிறது.

காஷ்மீரில் இந்த 35 வருடங்கள் செக்யூரிட்டிக்காக செலவிட்ட, காஷ்மீர் வழியாக இந்தியா உள் வரும் தீவிர வாதிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கச் செலவிடும் நிதியால் நம் அனைத்து இந்திய நகரங்களின் public Infra structure நிஜமாக உலகத்தரமாக அமைத்திருக்க முடியும்.

காலத்தால் சம்யோசிதமாகக் கோட்டை விட்டது இந்தியாவின் மிகப்பெரும் நிரந்தரத் தனிச் செலவினம் என்றாகியிருக்கிறது.

நல்ல முயற்சி. நிறைந்த தகவல்களுடன் எழுதுங்கள் செல்வன்.

Unknown said...

ஹரிஹரன்,

பாகிஸ்தானுடன் சண்டையிட்டு நாம் செய்த செலவு நீங்கள் சொன்னதுபோல் மிக அதிகம்தான்.ஆனால் நம்மால் அதை சமாளிக்க முடிந்தது.பாகிஸ்தானால் அதுமுடியாமல் ஒட்டாண்டியாய் நிற்கிறது.ஆனால் இந்தப்பணம் நீங்கள் சொன்னதுபோல் நல்லவிதத்தில் செலவு செய்யப்பட்டிருக்கலாம்.மேலும் விரிவாக இதை பற்றி எழுதுகிறேன்.நன்றி

நாகை சிவா said...

செல்வன், தலைப்பே தப்பாக உள்ளது. அத என்ன ஒரு கேள்விக்குறி.

உலகத்தின் எந்த கொம்பனும் நம்மை நேருக்கு நேர் எதிர்க்க துணிய மாட்டான். கொம்பனே எண்ண மாட்டான் என்னும் போது பாகிஸ்தான் ஒரு துக்கடா, அது தான் முதுகில் குத்தும் செயலை செய்துக் கொண்டு இருக்கின்றது. அதை அடக்குவதற்கு நமக்கு இன்னும் ஒரு சரியான தலைவர் கிடைக்கவில்லை(இந்திராவிற்கு பிறகு)

ஐ.நா.விடம் நாம் சென்றுது தவறு என்று எனக்குப்படுகின்றது. காஷ்மீரை நம்மிடம் சேர்ப்பதில் ராஜ தந்திரமாக செயல்ப்பட்ட நாம் இந்த விசயத்தில் கோட்டை விட்டு விட்டோம்.
அதற்கு நேருவின் தவறான வெளியுறவு கொள்கையும் ஒரு காரணமாக இருக்குமோ. நல்லவேளை அந்த சமயத்தில் பட்டேல் இருந்தார். அவர் இல்லாவிட்டால் நாம் சற்று பலவீனப்பட்டு இருப்போம்.

Unknown said...

அப்படி தலைப்பிட காரணம் இன்னும் அந்த யுத்தம் தொடர்வதுதான் சிவா.யுத்தம் முடியுமுன் வெற்றி நமதே என எண்னக்கூடாது.எதிரியை முழுக்க தாக்கி தோற்கடிக்கவேண்டும்.

ஆம்.காஷ்மீரை ஐநாவுக்கு கொண்டு சென்றது நேரு செய்த இமாலய தவறு.அதைப்பற்றி விரிவாக எழுதுகிறேன்.இந்திரா ஆயிரம் தப்பு செய்தாலும் பாகிஸ்தான் விவகாரத்தில் அவர்களுக்கு ஆப்படிக்க தவறவில்லை