Tuesday, July 25, 2006

14.விண்ணில் கவுண்டர்

இந்த வார தமிழோவியத்தில் வெளிவந்த என் படைப்பு.தொகுத்தவர் நிலாச்சாரல் நிலாராஜ்

சிச்சுவேஷன்: கவுண்டரும் செந்திலும் (மட்டும்) விண்வெளி ஓடத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். தொழில் நுட்பக் கோளாறு ஏற்படுகிறது.

கவுண்டரும் செந்திலும் ராக்கெட்டில் திரும்பி வருகின்றனர்.

கவுண்டர்: அடே ஆன்டெனா மண்டையா..உன்னை ஆண்டெனா மண்டையன்னு கூப்பிட்டு கூபிட்டு இப்ப நிஜமாவே உன் தலைல ஆண்டெனா முலைச்௪¢ருச்சு பாத்தியாடா?

செந்தில்: சும்மா இருங்கண்ணே... பூமில இறங்கினதும் என்னை எல்லாரும் ஹீரோன்னு கூப்பிடுவாங்க.

கவுண்டர்: உன்னை ஜீரோன்னுதாண்டா கூப்பிடுவாங்க. அடேய் பனம்பழ வாயா.. செவ்வாய் கிரகத்துல மனித குரங்கு இறங்கினா என்னாகும்ணு பாக்க உன்னை அங்கே அனுப்பி வெச்சாங்க.

செந்தில்: அண்ணே..நான் கொஞ்ச நேரம் வண்டி ஓட்டறண்ணே..

கவுண்டர்(அதிர்ச்சியுடன்): அடேய்..இது என்ன மாட்டுவண்டியாடா நீ ஓட்டறதுக்கு.. ராக்கெட்டுடா... அடேய், அதை திருப்பாதே... சொன்னா கேளு...

(செந்தில் எதையோ திருக ராக்கெட் குலுங்குகிறது..)

செந்தில்: என்னண்ணே வண்டி வெச்௪¢ருக்கீங்க?ஒண்ணுமே சரி இல்லையே?

கவுண்டர்: ஏண்டா சைக்கிள் ஹேண்டில்பாரை திருப்பற மாதிரி ராக்கெட் மோட்டரை திருப்பி விட்டுட்டையே? ராக்கெட் இந்த குலுங்கு குலுங்குதே? இப்ப என்னடா பண்றது?

செந்தில்: அண்ணே.உங்களுக்கு விஷயமே தெரியாது... நான் ஒரு சைக்கிள் மெக்கானிக். சைக்கிள் ரிப்பேர் பண்ற எனக்கு இந்த ஜுஜுபி ராக்கெட்டை ரிப்பேர் பண்ண தெரியாதா? இப்ப பாருங்க இதை சரி செய்யறனா இல்லையான்னு..

(செந்தில் கண்ட்ரோல் பேனலில் உட்கார்ந்து எதை எதையோ திருகுகிறார். கலர் கலராய் புகை வருகிறது)

கவுண்டர்: அடேய் என்ன்டா பண்றே?வண்டி சுத்தமா நின்னு போச்சேடா?

செந்தில்: அண்ணே..என்ன பிரச்சனைன்னு கண்டு புடிச்௪¢ட்டேன். ராக்கெட் சக்கரம் பஞ்ச்சர் ஆயிருக்கு. அதை ஒட்டுனா வேலை முடிஞ்சது..

கவுண்டர்: அடேய்..நிஜமாவாடா..? ராக்கெட் சக்கரம் பஞ்சர் ஆச்சுன்னு இதுவரைக்கும் சரித்திரமே இல்லையேடா?

செந்தில்: அண்ணே..விண்கல் ஏதோ பட்டு சக்கரம் பஞ்சர் ஆயிடுச்சுன்னே. நீங்க ஒரு பாத்திரத்துல தண்ணியை நிரப்பி வெளில போயி பஞ்சர் ஒட்டிட்டு வாங்க. எல்லாம் சரியாயிடும்.

கவுண்டர்: அடேய்..பஞ்சர் வாயா? ராக்கெட்டுக்கு பஞ்சர் ஒட்ட சொல்றையே..இது அடுக்குமாடா? இது நீதியாடா? நியாயமாடா?

செந்தில்: அண்ணே...இல்லைன்னா ஒண்ணு பண்ணுங்க. இறங்கி ராக்கெட்டைத் தள்ளி விடுங்க. நான் ஸ்டார்ட் பண்ணி பாக்கறேன். ஓடுதான்னு பாக்கலாம்.

கவுண்டர்: என்னது இறங்கி ராக்கெட்டை தள்ளறதா?அடேய் உன்னை கொலையே பண்ணினாலும் தப்பில்லை.

கவுண்டர் செந்திலை போட்டு மொத்து,மொத்து என மொத்துகிறார்.செந்தில் கன்ட்ரோல் பேனல் மேல் விழ, ராக்கெட்டில் மேலும் புகை வருகிறது. திடீரென ஸ்டார்ட் ஆகி பூமியை நோக்கி விரைகிறது

செந்தில்: அண்ணே..எப்படி என்னால தான ஸ்டார்ட் ஆச்சு?

கவுண்டர்: உன்னால இல்லைடா...உன்னை உதைச்சதால தாண்டா ஸ்டார்ட் ஆச்சு. இந்தா இன்னும் ரெண்டு உதை வாங்கிக்க...

(செந்திலைத் துரத்துகிறர் கவுண்டர்)

Monday, July 24, 2006

12A.காஷ்மீர்:பாகிஸ்தான் ஆட்சியின் லட்சணம்

வங்கதேச போருக்கு காரணம் என்ன?சொன்னால் அதிசயமாக இருக்கும்.

மொழி.

வங்கதேசத்தவர்கள் வங்கமொழி மீது மிகுந்த பற்று உடையவர்கள்.தமிழ்மீது நமக்கு என்ன பற்று உள்ளதோ அதே போல் வங்கமொழி மீது அவர்களுக்கு பற்று உள்ளது.வங்கமொழி இலக்கியங்கள் நிறைந்த கருத்து செறிவுள்ள மொழியாகும்.

இப்படிப்பட்ட மொழியை அழிக்கும் வேலையில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டது.மார்ச் 21,1948ல் முகமது அலி ஜின்னா "உருது மட்டுமே பாகிஸ்தானின் அரசு மொழியாக இருக்கும் " என டாக்காவில் வைத்து அறிவித்தார்.வங்காளிகள் இதை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.வங்கதேசத்தை விட்டு கிளம்புமுன் ஜின்னா "உருதுவின் எதிரிகள் பாகிஸ்தானின் எதிரிகள்" என அறிவித்தார்.தேசத்தந்தையின் இந்தப்பேச்சு வங்கதேசத்தவரை அதிர்ச்சி அடைய செய்தது.

வங்க மொழியும் உருதுவும் இரண்டும் தேசிய மொழியாக வேண்டும் என்று கேட்டவர்களை ஜின்னா பின்வரும் பெயர்களில் அழைத்ததாக டாக்டர் வஹீத் உஸ்மான் மானிக் வேதனையுடன் தெரிவிக்கிறார்.

"communists," "enemies of Pakistan," "breakers of integrity of Pakistan," "defeated and frustrated hate-mongers," "champions of provincialism," " breakers of peace and tranquility," "political assassins and political opportunists," "traitors," " inhabitants of fools' paradise," and "self-serving, fifth columnists" etc

தமது மொழிக்கேற்பட்ட இழிவை பொறுத்துக்கொள்ள முடியாத வங்கதேசத்தவர் 1952ல் மொழிப்போரை துவக்கினர்.அது அவர்களை மேலும்,மேலும் அன்னியப்படுத்தி கடைசியில் தேர்தலில் வென்ற முஜிபுர் ரஹ்மானை அரசமைக்க விடாது -யாஹியாகான் போர் துவக்கியதில் வந்து முடிந்தது.
யோசித்து பாருங்கள்.நாளை காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைந்தால் காஷ்மிரையும் இப்படி அழிக்க முற்படமாட்டார்கள் என்பதற்கு என்ன நம்பகம் இருக்கிறது?

பாகிஸ்தான் பிடியில் காஷ்மீரின் ஒரு பகுதி இருக்கிறது.அதை அவர்கள் எந்த லட்சணத்தில் ஆட்சி செய்கிறார்கள் என்பதை அறிந்தால் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையவேண்டுமா என்பது பற்றி சந்தேகமே இல்லாது போய் விடும்.

நார்தர்ன் ஏரியா எனப்படும் வடக்கு காஷ்மீர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும்.இது மிகவும் இயற்கை அழகு நிரம்பிய பகுதியாகும்.இந்த பகுதியை கடந்த 1947ல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக பிடித்தது.அன்றிலிருந்து இன்றுவரை 60 ஆண்டுகளாக தேர்தலே நடக்கவில்லை.சட்டசபையும் கிடையாது.பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த பகுதியில் அதிகாரமே கிடையாது என்பதை அறிந்தால் அதிரத்தானே செய்வோம்?ஆனால் உண்மை அதுதான்.அங்கு ஆட்சி செய்வோர் பாக் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.அவர்கள் வைத்ததே சட்டம்.கோர்ட் அதிகாரம் செல்லுபடி ஆகாது.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு பிரதிநிதியோ,நாடாளுமன்ற உறுப்பினரோ கிடையாது.

அதிர்ச்சியாக இருக்கிறதா?ஆம்.இதுதான் பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நிலை.இந்த லட்சணத்தில் காஷ்மீரை வைத்துக்கொண்டு நம்மிடம் இருக்கும் காஷ்மீரையும் கேட்கிறார்கள் என்றால் அவர்கள் கையில் சிக்கினால் காஷ்மீர் சட்னியாகிவிடும் என்ற உண்மை தெரிகிறதல்லவா?

அங்கே பல்கலைக்கழகம் கிடையாது,கல்லூரி கிடையாது,கரண்டே இல்லை,ரோடு கிடையாது,ரேடியோ கிடையாது.என்ன கொடுமை இது என பாருங்கள்.பஞ்சாபிகளையும்,பதான்களையும் அங்கே அனுப்பி அங்குள்ள 11 லட்சம் மக்களின் சமூக அமைப்பை குலைக்க பாகிஸ்தான் அரசு முயற்சி செய்தது.1988ல் மிகப்பெரும் ரகளை நடந்து அந்த முயற்சி முறியடிக்கப்பட்து.

தெற்காசியா மானிடர் எனும் அமைப்பு அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டு காட்டுகிறது.படிக்கவே நாராசமாக இருக்கிறது.

இந்தியாவிடம் உதவி கேட்கும் நிலைக்கு அங்குள்ள மக்கள் வந்துவிட்டார்கள்.அவர்கள் ஒரு மாநாடு போட்டு "இந்தியா ஏன் எங்களுக்கு 60 வருடமாக உதவி செய்யவில்லை?" என கேட்கிறார்கள்.

என்ன பதில் சொல்வது அவர்களுக்கு?சொல்லுங்கள்.

We are fed up of the culture of the gun in the region. The atrocities perpetrated by the Pakistani government against indigenous people of Gilgit-Baltistan are hard to describe," Manzoor Hussain Parwana, chairman of Gilgit-Baltistan United Movement, told IANS.

Parwana was here last week, along with nearly 30 leaders representing PoK, Northern Areas and the Kashmiri diaspora, to attend a two-day international conference to find "alternative futures" for Kashmir.

"Nobody listens to us. There is no political representation for us in Pakistani National Assembly and there are no legal recourse again state-sponsored atrocities," he added in a charged tone.

"For the last 60 years, we have not been given political rights. Why has India not helped us?" he asked. "We want India to speak up against atrocities committed by the Pakistani army against indigenous people of Gilgit-Baltistan," he said.

(தொடரும்)

1.பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா?

1.காஷ்மீர்:பாகிஸ்தானின் தேசிய அவமானம்-2

Sunday, July 23, 2006

12.காஷ்மீர்:பாகிஸ்தானின் தேசிய அவமானம்-2

1971 யுத்தத்தை பற்றியும் அதன் காரணங்களைப் பற்றியும் ஆராய்வது காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் காட்டும் முனைப்பை புரிந்துகொள்ளவும் பாகிஸ்தானால் காஷ்மீரிகளுக்கு காத்திருக்கும் ஆபத்தையும் புரிந்து கொள்ள உதவும் என்பதால் 1971 யுத்தத்தை பற்றியும் அதற்கான விளைவுகள்,காரணங்கள் பற்றியும் ஆராய்வோம்.

ஒரே மதம்,ஒரே தேசம் என அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்த வங்கதேசத்தவர்க்கும்,பாகிஸ்தானியருக்கும் மோதல் ஏற்பட்டது ஏன்?வங்கதேசத்தவருக்கு பாகிஸ்தானால் நடந்தது நாளை (காஷ்மீர் பாகிஸ்தானில் இணைந்தால்) பாகிஸ்தானால் காஷ்மீரிகளுக்கு நடக்காது என்பதற்கு உறுதிமொழி என்ன?

மோதல் ஏன் நடந்தது என்பதற்கு போகுமுன்,காஷ்மீர் வங்கதேசம் இடையே உள்ள ஒற்றுமையை காணும் முன் பாகிஸ்தானால் "வங்கதேசத்தவருக்கு நடந்தது என்ன" என்பதை முழுமையாக ஆராய்வோம்.

டான் எனும் பாகிஸ்தானின் முண்ணனி பத்திரிக்கை 1971ல் வங்கதேசத்தவருக்கு பாகிஸ்தானால் நடந்த அட்டூழியங்களை பற்றி குறிப்பிடும்போது "பாகிஸ்தானின் பெயருக்கு மாறாத கேவலம் ஏற்பட்டுவிட்டது" என வேதனையுடன் குறிப்பிடுகிறது.இது "பாகிஸ்தான் எனும் தேசத்துக்கு அசிங்கம்" (A nation's shame) என மன வேதனையுடன் பாகிஸ்தானிய பிரிகேடியர் F.B.அலி தனது கட்டுரையில் குறிப்பிட்டு கண்ணீர் வடிக்கிறார்.

தமது சகோதரரும்,ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புமான அன்றைய வங்கதேசத்தவருக்கு பாகிஸ்தான் அரசு செய்த ரணகொடூரங்களை நன்மனம் கொண்ட நேர்மையான பாகிஸ்தானிய ஜெனெரல்கள்,மக்கள்,பத்திரிக்கையாளர் என அனைவரும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர்.

வங்கதேசத்தில் 1971ல் என்ன தான் நடந்தது?

1971 பாகிஸ்தானின் அவமானச்சின்னம் என பாகிஸ்தானிய பத்திரிக்கையான பாக்டுடே தெரிவிக்கிறது.அந்த போரில் தோற்றதற்காக இப்படி சொல்லவில்லை.வங்கதேசத்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக பாகிஸ்தானிய ராணுவம் கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலை காரணமாகத்தான் அப்படி பாக்டுடே குறிப்பிடுகிறது.


போரில் வெல்வதும்,தோற்பதும் சகஜம்.போரில் தோற்பது என்பது அனைத்து நாடுகளுக்கும் நடைபெறக்கூடியதுதான்.ஆனால் லட்சக்கணக்கானோரை இன அழிப்பு செய்த நாடு எனும் பெயர் வாங்குவது அந்த தேசத்துக்கே அவமானம் இல்லையா?அப்படி ஒரு அவமானம் தான் 1971ல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது.வங்கதேசத்தில் 1971ல் பாகிஸ்தானிய ராணுவம் நடத்திய அட்டூழியங்களை தலைகுனிவுடனும்,வெட்கத்துடனும் பாக்டுடே பின்வருமாறு தெரிவிக்கிறது.

"267 நாட்கள் பாகிஸ்தானிய ராணுவம் பங்களாதேஷில் வெறியாட்டம் ஆடியது.டாக்காவில் மட்டும் 100,000 பங்களாதேஷிகள் கொல்லப்பட்டனர்.குல்னா மாவட்டத்தில் 150,000 பேரும்,ஜெசோரில் 75,000 பேரும்,கோமிலாவில் 95,000 பேரும் சிட்டகாங்கில் லட்சம் பேரும் கொல்லப்பட்டனர்.மொத்தமாக 18 மாவட்டங்களில் 1,247,000( 12.50 லட்சம்) பேர் கொல்லப்பட்டனர்.இது குறைந்த பட்ச கணக்குதான்.உண்மை கணக்கு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்."

பாக்டுடே இந்த இன அழிப்பை பற்றி மேலும் கூறுவதாவது...

"வங்கதேசத்தில் வாழ்ந்த 25 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் இந்த இன அழிப்பு நடந்தது.ஒப்பிட்டால் நாஜி தளபதி ரோமல் 300,000 பேரை மட்டுமே கொன்றான்.ஸ்டாலின்,மாவோ ஆகிய கொலைகார அரசுகள் கொன்று குவித்தவர்களைவிட அதிக படுகொலைகள் செய்த அரசாக -யாகியாகான் அரசு விளங்கியது.." என கண்ணீர் வடிக்கிறது பாக்டுடே.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்துக்கு எல்லையே இல்லை.இதுவரை வரலாற்றில் நிகழ்ந்த கூட்ட கற்பழிப்புகளில் முதலிடம் வகிப்பது வங்கதேசத்தில் பாகிஸ்தானிய ராணுவம் நிகழ்த்திய கற்பழிப்புகள்தான் என ரேப் ஆப் நான்கிங்(Rape of Nanking) புத்தகத்தை எழுதிய ஐரிஸ் சாங் அதிர்ந்து போய் குறிப்பிடுகிறார்.ஜென்டெர்சைட் எனும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கும் இயக்கம் வங்கதேச கற்பழிப்புகளை பற்றி குறிப்பிடுவதாவது.

"..கூட்டம் கூட்டமாக சேர்ந்து வங்கதேச பெண்களை கற்பழிப்பது,அதன் பின் கொலை செய்வது பாகிஸ்தானிய ராணுவத்துக்கு சகஜமாகிவிட்டது.வங்கதேசத்தில் அவர்கள் நடத்திய கற்பழிப்புக்கள் ஹிட்லரின் ஜெர்மனி இரண்டாம் உலகப்போரின்போது ரஷ்யாவில் நடத்தியதற்கு சற்றும் குறைந்ததல்ல.கிட்டத்தட்ட 4 லட்சம் பெண்கள் கூட்டமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டனர்.(2 அல்லது 3 லட்சம் என்றும் தகவல்கள் உண்டு).."

இந்த கற்பழிப்புகளுக்கு எந்த வயது வித்யாசமும்,மத பாகுபாடும் இல்லையாம்.8 வயது குழந்தை முதல் 75 வயது மூதாட்டி வரை இந்த வேட்டை நாய்களால் குதறப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஜென்டெர்சைட்.பெண்களை கற்பழிப்பதோடு நிறுத்தாமல் அவர்களை ராணுவ முகாமுக்கு தூக்கிப்போய் வேண்டும்போது மீண்டும்,மீண்டும் பலாத்காரம் செய்வது நடந்தது என கண்ணீர் வடிக்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு.

இந்த கற்பழிப்புக்களை கண்டு கண்ணீர் வடித்த வங்கதேசத்தந்தை முஜிபுர் -ரஹ்மான் கற்பழிக்கப்பட்ட பெண்கள் தேசபக்த வீராங்கனைகள் என அறிவித்து அவர்களை சமூகத்தில் இணைக்க முயற்சித்தார்.ஆனால் பழமையில் ஊறிய வங்கதேச ஆண்கள் அப்பெண்களை ஏற்றுக்கொள்ள முன்வரவே இல்லை என்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு.

இது முழுக்க,முழுக்க பாகிஸ்தானிய சர்வாதிகாரி யாஹியா கானின் தூண்டுதலில் தான் நடந்தது என்கிறது ஜென்டெர்சைட்."30 லட்சம் பேரை கொல்லுங்கள்" என நேரடியாக அவர் உத்தரவிட்டாராம்.

வரலாற்றசிரியரான ராபர்ட் பெயின் இந்த கொலைகளுக்கும்,இன அழிப்புக்கும் குற்றம் சாட்டுவது அப்போதைய பாகிஸ்தான அரசை நடத்திய அனைவரையுமே.ஜனாதிபதி -யாஹியாகான்,ஜெனெரல் டிக்காகான்,ஜெனெரல் பிர்சாடா,ஜெனெரல் உமர்கான் மற்றும் உளவுத்துறைத்தலைவர் அக்பர்கான் ஆகியோரே இதற்கு பொறுப்பு என்கிறார் ராபர்ட் பெயின்.

இந்தியா வங்கதேசத்துக்கு வாழ்வையும்,விடுதலையையும் மீட்டுத்தந்தது.ஆனால் இந்த படுகொலையை நிகழ்த்திய மிருகங்கள் எந்த தண்டனையையும் அனுபவிக்கவில்லை.ஜெனெரல் அபுதுல்லா நியாசி தன் 84வது வயதில் 2004ம் ஆண்டு தான் இறந்தான்.நியாசி ஒரு அவமானமாக பாகிஸ்தானில் கருதப்பட்டான்.காரணம் அவன் நடத்திய கொலைகள் அல்ல.இந்திய ஜெனெரல் ஜெகஜித்சிங் அரோராவிடம் சரணடைந்து அந்த போட்டோ பத்திரிக்கைகளில் வந்ததுதான் காரணம்.ஜெனெரல் அஷ்ரபும்கான் தற்போது நியூயார்க்கில் சவுக்கியமாக தொழில் செய்து வாழ்க்கை நடத்துகிறாராம்.

(தொடரும்..)

காஷ்மீர்:பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா? - 1

Saturday, July 22, 2006

11.பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா?

"இனிமேல் வரும் ஒவ்வொரு பாகிஸ்தானிய அரசும் அதற்கு முந்தைய அரசை விட மோசமானதாகவே இருக்கும்" என்று தனது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்பு கணித்தார் ஜின்னா.தேசத்தந்தையின் அந்த வாக்கை மெய்யாக்க பாகிஸ்தானிய அரசுகள் தவறவே இல்லை :-)பாகிஸ்தானின் புகழ்பெற்ற எழுத்தாளரான கவ்சாஜி சொல்வதுபோல் "ஜின்னா அந்த வரிகளை மிக உறுதியுடனும்,எதிர்காலம் பற்றிய சிறந்த ஞானத்துடனும் சொன்னார்"

காஷ்மீர் குறித்த இரு அரசுகளின் நிலைப்பாட்டை,போர்த்தந்திரங்களை அலசி ஆராய்ந்தால் பாகிஸ்தானின் ராஜதந்திரங்களை இந்திய அரசு எதிர்கொண்டு முறியடித்த கதைகள் தெரியவரும்.இந்தியாவில் மத்திய அரசுகள் மாறி,மாறி வந்தபோதும் காஷ்மீர் குறித்த அவற்றின் கொள்கைகள் மாறுவதே கிடையாது.தமிழக அரசியலை பிடித்திருக்கும் சாபக்கேடான அரசியல் விரோதம் மத்திய அரசியலில் இல்லை என்பது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம்.

காஷ்மீரை யுத்தம் மூலம் அடையவே முடியாது என்பது பாகிஸ்தானுக்கு 1965,1971 யுத்தங்கள் முடிந்தபின் தான் தெரியவந்தது என்று சொன்னால் அதிசயமாக இருக்கும்.ஆனால் அதுவரை பாகிஸ்தானிய அரசு அப்படி ஒரு நம்பிக்கையை தான் தன் மக்களுக்கு ஊட்டிக்கொண்டிருந்தது."1 பாகிஸ்தானிய சிப்பாய் 10 இந்திய சிப்பாய்களுக்கு சமம்" என்று பெருமை பேசி இந்தியாவின் ராணுவ வலிமையை குறைத்து மதிப்பிடும் செயலை பாகிஸ்தான் அரசு செய்தது.மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட சொல்லப்பட்ட அந்த வாசகத்தை அரசும் ராணுவமும் நம்பியதுதான் பரிதாபம்.1965ல் முதல் ஆப்பை வாங்கிய பாகிஸ்தான் ராணுவம் அதன்பின் அம்மாதிரி சொல்லுவதை குறைத்துக்கொண்டது.

1971ல் நடந்த யுத்தம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய முக்கிய காய்நகர்த்தல்.இந்திரா காந்தி அப்போது காட்டிய ராஜதந்திரமும்,விவேகமும் பிரமிப்பை ஊட்டுபவை.பாகிஸ்தான் மிக பலவீனமாக இருந்த நேரத்தில்,பாகிஸ்தான் ராணுவத்தின் பெரும்பகுதி பங்களாதேஷில் இருந்த நேரத்தில் போரை துவக்கி வெறும் பதினாறு நாளில் பாகிஸ்தான் ராணுவத்தை சரணடைய செய்தார்.பாகிஸ்தான் தனது பாதி நிலப்பரப்பை அன்று இழந்தது.

நிலப்பரப்பு போனது என்பதை விட பல சோகங்கள் பாகிஸ்தானுக்கு நிகழ்ந்தன.சீனா உதவிக்கு வரும்,அமெரிக்கா உதவிக்கு வரும் என பாகிஸ்தான் தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தது.ஆனால் அமெரிக்காவோ சீனாவோ இந்தியாவை தாக்கினால் சோவியத் யூனியன் இந்தியாவின் உதவிக்கு வரும் என்ற உறுதியை இந்திரா பெற்றிருந்தார்.அதனால் அமெரிக்காவின் 7வது கடற்படை பாகிஸ்தானுக்கு உதவிக்கு வரும் என்ற பகல்கனவு தகர்ந்து போனது.

அப்போது எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை எல்லையாக ஏற்க வாயளவில் ஒரு ஒப்பந்தம் இந்திரா,பூட்டோவால் போடப்பட்டு பூட்டோ கெஞ்சியதால் கைவிடப்பட்டது.அதை ஒப்பந்தமாக போடாதது இந்தியா செய்த ஒரு ராஜதந்திர தவறு என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.வெற்றிக்களிப்பில் இந்திராகாந்தி அந்த தவற்றை செய்தார்.

1971 முடிந்தபின் பாகிஸ்தானில் நிலவிய சோகத்துக்கு எல்லையே இல்லை.அது சாதாரண தோல்வி அல்ல.கம்பர் சொல்லுவதுபோல்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்

என்பதுபோல் புகழ்,மானம்,வீரம் அனைத்தையும் பங்களாதேஷில் தொலைத்துவிட்டு போர்க்கைதிகளாய் 90,000 படைவீரர் இந்திய சிறையிலிருக்க வளையல் அணிந்த ஒரு பெண்ணிடம் தலைகுனிந்து ஒப்பந்தம் போட்டு கெஞ்சி கூத்தாடி தன் படைவீரரை காப்பாற்றி அழைத்துக்கொண்டு போன அந்த கேவலத்தை பாகிஸ்தானிய அரசால்,அதன் ராணுவத்தால்,அதன் உளவு அமைப்புக்களால் இன்றுவரை மறக்க முடியவில்லை.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு,தன் ராணுவம் இந்தியாவுக்கு நிகரில்லை, தான் சர்வதேச அரசியலில் தனிஆள் என்ற நிதர்சனம் பாகிஸ்தானை வாட்டியது.

இந்தியாவுக்கு அடிகொடுக்க வேண்டும்,பங்களாதேஷில் தனக்கு நடந்ததை தான் இந்தியாவுக்கு காஷ்மீரில் செய்ய வேண்டும் என்ற வெறி பாகிஸ்தானிய ராணுவத்திடமும்,உளவு அமைப்புக்களிடமும் அதன்பின் புகுந்தது.

(தொடரும்)

Friday, July 21, 2006

10.இன்டர்வியூவில் ஜெயிப்பது எப்படி?

இதுவரை பல இன்டர்வியூக்களில் கலந்துகொண்டு அடி,உதை,பரிசு,பாராட்டு வாங்கியவன் என்ற தகுதியில் இந்த பதிவை எழுதுகிறேன்.:-)

இந்த பதிவை எழுத காரணமாக இருந்த பாலாஜிக்கு நன்றி.

இன்டர்வியூ பற்றி நான் மாணவனாக இருந்தபோது பலவித வதந்திகள் உலாவரும்.சாம்பிளுக்கு சில.

"ஒரு கேண்டிடேட் முதல்மாடியிலுள்ள இன்டர்வியூ அறைக்கு சென்றான்.அவனிடம் கேட்கப்பட்ட கேள்வி 'நீ ஏறிவந்த படிகள் எத்தனை?'.அவன் சொன்ன பதில் 15,சரி.உடனடியாக வேலை கிடைத்தது'

'இன்னொரு கேண்டிடேட்டிடம் கேட்கப்பட்ட கேள்வி 'உனக்கு பின்புறமுள்ள சுவரின் நிறம் எது?டக்கென்று திரும்பி பார்த்தான்.அவுட்...முன்சுவரும்,பின்சுவரும் ஒரே நிரம்தானே இருக்கும் என்ற லாஜிக் அவனுக்கு தெரியவில்லையே?....'

இன்டர்வியூவுக்களுக்கு போய் அடிபட்ட பின் தான் தெரிந்தது.இதெல்லாம் கப்சா என்று.சிஐடி வேலைக்கு வேண்டுமானால் இப்படி இன்டர்வியூ வைப்பார்கள் என்னவோ...எனக்கு யாரும் இப்படி வைக்கவில்லை.

என் அனுபவம் என்ன என்று சொன்னால் தான் நான் எழுதும் இக்கட்டுரையின்(அல்லது தொடரின்) பயனை அறிய உதவியாக இருக்கும் என்பதால் சொல்கிறேன்.பல பன்னாட்டு/இந்திய பெரும் கம்பனிகளின் இன்டர்வியூக்களில் பங்குகொண்டிருக்கிறேன்.தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்கிறேன்.சந்தையியலில் ஆய்வு நடத்த நூற்றுக்கணக்கானோரை இன்டர்வியூ செய்திருக்கிறேன்.மனோதத்துவத்தில்(psychology) பல கோர்ஸ்கள் எடுத்து படித்திருக்கிறேன்.

1.இன்டர்வியூவின் ஹீரோ...

நீங்கள் அல்ல.உங்கள் பயோடேட்டா(Resume) தான் ஹீரோ.பல சமயங்களில் இன்டர்விய்யு நடத்துமுன்னரே கேண்டிடேட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவர்.எதன் அடிப்படையில்?உங்கள் பயோடேட்டாவின் அடிப்படையில் தான்.வந்திருக்கும் பயோட்டேட்டாக்களை பரிசீலித்து அதில் கம்பனி நிர்வாகம் எதிர்பார்க்கும் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து,அவர்கள் மேல் ஒரு கண்ணோடு தான் இன்டர்வியூ நடக்கும்.இம்மாதிரி சமயங்களில் இன்டர்வியூவை அவர்களாக சொதப்பிக்கொண்டால் தவிர அவர்கள் தோற்கும் வாய்ப்பு வெகு குறைவு.இம்மாதிரி பட்டியலில் இல்லாதவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு மிக குறைவு.அவர்கள் எதிர்பார்க்கும் கேண்டிடேட் வரமறுத்தால்,சம்பளம் அதிகம் கேட்டால் மட்டுமே உங்களை தேர்ந்தெடுப்பர்.

ஆக உங்கள் பயோடேட்டா சரியில்லை என்றால்(சரீல்லை என்றால் அச்சுப்பிழை,எழுத்துப்பிழை அல்ல.உங்கள் தகுதிகள் சரி இல்லை என்றால் இன்டர்வியூவில் நீங்கள் என்ன தான் ஜொலித்தாலும்.selection.கஷ்டம்..கஷ்டம் தான்)

பயோடேட்டா சரியாக இருந்தால் இன்டர்வியூவில் சொதப்பினாலும் தேர்ந்தெடுக்கபட வாய்ப்பு அதிகம்.

2.ஆங்கிலத்தேர்ச்சி

மிக,மிக,மிக,மிக,மிக,மிக,மிக,மிக...(இன்னும் ஒரு ஆயிரம் முறை எழுதிக்கொள்ளுங்களேன்....) முக்கியம்.

(ஆங்கிலம் மொழி..தகுதி அல்ல போன்ற சண்டைகளுக்கு இங்கே எனக்கு நேரமில்லை.)

பன்னாட்டு கம்பனிகளில் இரண்டு ஜாதிகள் உண்டு.ஆங்கிலம் இலக்கண சுத்தமாக +fluent பேசுபவன்/எழுதுபவன்... others என இரு ஜாதிகள் உண்டு.

நான் வேலை செய்த ஒரு பன்னாட்டு கம்பனியில் பொள்ளாச்சியில் ஒரு வார்த்தை ஆங்கிலம் தெரியாத டீலர்களுக்கு பொருட்களை விற்றேன்.அந்த வேலை செய்ய சுத்த தமிழே தெரிந்தால் போதுமானது.ஆனால் கம்பனி மீட்டிங்கில் பச்சை தமிழரான நிர்வாகியிடம் இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில் பேசப்பயந்து பேசாமல் வாயடைத்து நின்ற பலர் அதனாலேயே பல வாய்ப்புக்களை இழந்திருக்கின்றனர்.

என் மார்க்கட் பற்றிய விவரங்களை அழகாக வர்டில்(MS word) அடித்து ரிப்போர்ட் தந்து பல நல்ல விளைவுகளை அடைந்திருக்கிறேன்.சொல்ல மிக கூச்சமாக இருக்கிறது என்றாலும் சொல்கிறேன்.உலகின் முதல் நிலை வங்கி ஒன்றில் கடைநிலை வேலை(entry level salesman) ஒன்றை செய்துகொண்டிருந்தபோது கோவை கிளை சார்பில் அகில இந்திய அளவிலான மீட்டிங் ஒன்றில் salesman ஒருவர் பேசவேண்டும் என்ற சூழ்நிலை.அனைவரும் பயந்து நடுங்கியபோது துணிந்து எழுந்து மைக்கை பிடித்தேன்.


பேசி முடித்தபின் அந்த வங்கியின் உயர் நிர்வாக அதிகாரி வந்து எனக்கு கைகொடுத்து பாராட்டி வாழ்த்தியதை,அந்த வங்கியின் அனைத்து உயர் மட்ட அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் என் பெயர் தெரிந்ததை,அதனால் பல நன்மைகள்(links) எனக்கு கிடைத்தது,என் கிளைக்கு என்னால் அன்று பாராட்டு கிடைத்தது இதை எல்லாம் சொல்லி பெருமை தேடவேண்டிய அவசியத்தில் எழுதவில்லை.ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவே சொல்கிறேன்.நல்ல ஆங்கிலத்தில் பேசுவதால்,எழுதுவதால் மட்டுமே நான் இன்று அமெரிக்காவில் பல்கலைகழகத்தில் வகுப்புகள் எடுக்க,பாடம் சொல்லித்தர,சர்வதேச ஆங்கில ஜர்னல்களில் எழுத(கட்டுரைகளை மதிப்பிடு செய்ய) முடிகிறது.

English is an asset in MNC's.The higher you move in your career ladder the more you will realize this.English is THE business language.To repeat a point (ஆங்கிலம் மொழி..தகுதி அல்ல போன்ற சண்டைகளுக்கு இங்கே எனக்கு நேரமில்லை.)

(தொடரும்...)

Tuesday, July 18, 2006

9.செத்தான் ஜேம்ஸ்பாண்ட்

என்னத்த சொல்ல.பாவம் ஜேம்ஸ்பாண்டு

Tina Turner - Golden Eye home video

Saturday, July 08, 2006

8.ஒசாமா பின்லேடனை பிடிப்பது எப்படி?

ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்படி என்று சில பிரபலங்களிடம் ஐடியா கேட்டோம்.

ஜெயலலிதா: கருணாநிதியும்,சிதம்பரமும் ராஜினாமா செய்தால் உடனடியாக பின்லேடன் பிடிபட்டு விடுவான்.இதற்குமேலும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?


முன்னாள் போலிஸ் கமிஷனர் தேவாரம்:
தோரா போரா மலைபகுதியில் உள்ள அனைவரையும் பிடித்து உள்ளே போட்டு ஷாக் கொடுத்தால் பிடித்துவிடலாம்.


ஜார்ஜ்புஷ்:
ஈரான் மீது படை எடுத்தால் போதும்.அங்கே தான் அவர் ஒளிந்திருக்கிறார்.அங்கே இல்லை என்றால் அடுத்து வடகொரியா.இப்படி உலகின் அனைத்து நாடுகளையும் படை எடுத்து பிடித்து விட்டால் தப்பிக்க இடமே இல்லாமல் அவர் மாட்டிக்கொள்வார் அல்லவா?


டைரக்டர் கே.பாக்யராஜ்
நடிகை தேஜாஸ்ரியை தோரா போரா மலையில் டான்ஸ் ஆட சொல்லலாம்.பார்க்க வரும்போது பிடித்து விடலாம்.


இந்தி பட டைரக்டர்:
அவர் குடும்ப பாட்டு என்ன என்பதை கண்டுபிடித்து அதை பாடினால் அவர் பதில் பாட்டு பாடுவார்.அதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.


ராமநாராயனன்:
நாய் ராமுவையும்,யானை ராஜாவையும் அனுப்பினால் பிடித்துக்கொண்டு வருவார்கள்.


முன்னாள் மந்திரி ஓ.பி.எஸ்
அவரை பிடிக்கும் காண்டிராக்டை நைசா நம்ம கிட்ட தள்ளி விட்டிங்கன்னா வேலை நடந்திடும்.உங்களுக்கும் 10% கமிஷன் தந்துடலாம்.


தயாநிதி மாறன்:
ஒசாமா மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டால் தானே மாட்டிக் கொள்வார்.


பிடூ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்:
எவனையாவது புடிச்சு உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினா நான் தான் ஒசாமான்னு வாக்குமூலம் கொடுத்துடுவான்.கேஸ் பைலை குளோஸ் பண்ணிடலாம்.

உங்களுக்கு பிடித்த(பிடிக்காத) பிரபலங்கள் எப்படி ஐடியா கொடுப்பார்கள்?நகைச்சுவை பின்னூட்டமாக இடுங்களேன்.

(10 நாட்கள் வெளியூர் போகிறேன்.அங்கே மாகின்டாஷ் கம்ப்யூட்டர் தான் இருக்கிறது.அதில் தமிழ் பான்ட்கள் தெரியாவிட்டால் 10 நாட்கள் வலைபதிய முடியாது.Dont know what to do)

Friday, July 07, 2006

7.கோலிவுட்டில் பில்கேட்ஸ்

பில்கேட்சுக்கு போறாத காலம்.தமிழ்ப்படம் தயாரிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது.பில்கேட்ஸ் படம் எடுக்கிறார் என்றதும் அனைத்து டைரக்டர்களும் ஓடி வந்து விட்டனர்.ஒரு மீட்டிங் போட்டு கதை விவாதம் நடக்க தொடங்கியது.

பில்கேட்ஸ்:டைரக்டர்களே.பட்ஜெட் பற்றி கவலைப்படாம நல்ல கதையா ஒண்ணு சொல்லுங்க பாக்கலாம்.

ஏ.வி.எம் சரவணன்:தயவு செய்து நம்ம டைரக்டர் ஷங்கருக்கு வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.இனிமேல் இவர் டைரக்ஷனில் படம் தயாரிக்க உங்களால் மட்டுமே முடியும்.எங்களால் முடியாது.

பில்கேட்ஸ்;ஷங்கர் எங்கே நல்ல கதை ஒண்ணு சொல்லுங்க பாக்கலாம்.

ஷங்கர்:கதையா?என்ன உளறீங்க?ஜென்டில்மேனிலிருந்து அன்னியன் வரைக்கும் நான் எடுத்த படம் எல்லாத்துக்கும் ஒரே கதைதானே?என்ன புதுசா கதை கேக்கறீங்க?

ஏ.வி.எம் சரவணன்:(மனசுக்குள்)அடப்பாவி.அப்புறம் எதுக்கு எங்கிட்ட சிவாஜி கதை டிஸ்கஷன்னு சொல்லி காசு புடுங்கினாய்.இது நியாயமா?

பில்கேட்ஸ்:சரி.அது என்ன ஒரே கதைன்னாவது சொல்லக்கூடாதா?

ஷங்கர்:அது என்ன பெரிய விஷயம்?ஹீரோவுக்கு சமூகத்தால பாதிப்பு வருது.அதனால ஹீரோ வில்லனாகி கொலை பண்றான்.கடைசில பிடிபடறான்.சமூகம் திருந்துது. ஹீரோ கதாநாயகியோடு செட்டில் ஆயிடறான்.இதுதான் கதை.

சரவணன்: ஐயோ.ஐயோ..சிவாஜி படத்துக்கும் இதுதான் கதைன்னு சொல்லி எங்கிட்ட கோடி கோடியா பணம் வாங்கினார்.இப்ப அதே கதையெ உங்க கிட்ட சொல்லி பணம் வாங்கறார்.பில் கேட்சு இந்த ஆளை நம்பாதே..

பில்கேட்ஸ்:என்ன ஷங்கர்.சிவாஜி கதையை காப்பி அடிக்க போறீங்க போலிருக்கே?

ஷங்கர்:அவர் தான் சொல்றாருன்னா நீங்களும் நம்பிடறதா?சிவாஜி கதையை எப்படி காப்பி அடிக்க முடியும்?அந்த படத்துல தான் கதையே கிடையாதே?

பில்கேட்ஸ்:அப்ப நம்ம படத்துக்கு கதை என்ன?

ஷங்கர்:இதுக்கும் கதை கிடையாது.ஆனா தீம் வித்யாசமா இருக்கும்.

பில்கேட்ஸ்:ஐயா..நீங்க என்னை முடிச்சு கட்டறதுன்னு முடிவோட இருக்கீங்க போல.ஆளை விடுங்கைய்யா..அடுத்த டைரக்டர் யாரு?

அஜித்:தயவு செய்து டைரக்டர் பாலாவை போட்டு படம் எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பில்கேட்ஸ்:அருமையான ஐடியா.பாலா நீங்க ஒரு கதை சொல்லுங்க

பாலா:மனநோயாளி ஹீரொ,லூசு மாதிரியான அப்பாவி ஹீரோயின் இவங்க எப்படி சமூகத்தால பாதிக்கப்படறாங்க,கடைசில எப்படி சாகறாங்க இதுதான் கதை

விக்ரம்:ஐயோ இது சேது படத்தோட கதை

சூர்யா:இல்லை இது நந்தா படத்தோட கதை

தயாரிப்பாளர் துரை:இல்லவே இல்லை.இது பிதாமகன் கதை

பில்கேட்ஸ்:அடப்பாவி..நியாயமா இது?நீயும் வேண்டாம்.வேற டைரக்டர் யாராவது இருக்கீங்களா?

தேனப்பன்: நம்ம சிம்புவை போட்டு ஒரு படம் எடுங்க.உங்க சொத்து கரைஞ்சு பைனான்சியர் அன்பு கிட்ட கடன் வாங்கற நிலைமைக்கு வந்துடுவீங்க என்பது நிச்சயம்.

பில்கேட்ஸ்:சிம்பு..நல்லதா ஒரு கதை சொல்லுங்க பாக்கலாம்.

சிம்பு:ஐஸ்வர்யா ராய்,ஷெரோன் ஸ்டோன்,எஞலினா ஜோலி,நயன் தாரா,ஸ்னேஹா,திரிஷா,சந்தியா,கரிஷ்மா கபூர்,கரீனா கபூர்,ஷ்ரேயா,ஜோதிகா,சுஷ்மிதா சென்,மீரா சோப்ரா,இலியானா..

பில்கேட்ஸ்:அட நிறுத்துப்பா..கதை கேட்டா உலகத்துல இருக்கற எல்லா ஹீரோயின் பேரையும் வரிசையா சொல்லிட்டிருக்கே?

சிம்பு:கதையே இதுதாங்க.இவங்க எல்லார் கால்ஷீட்டையும் வாங்கிடுவோம்.ஒவ்வொருத்தர் கூடவும் நான் லவ் பண்ற மாதிரி டூயட்,முத்தக்காட்சி,கவர்ச்சிகாட்சின்னு வெச்சா மூணு மணிநேரம் போறதே தெரியாதுங்க.என்ன சொல்றீங்க?

பில்கேட்ஸ்:அடப்பாவி.உனக்கு தேனப்பன் தான் சரி.அவரையே பிடிச்சுட்டு தொங்கு.வேற நல்ல டைரக்டர் இருக்காரா?

ராமநாராயணன்:நான் இருக்கேன்.

பில்கேட்ஸ்:நீங்க இன்னும் படம் எடுத்துட்டு தான் இருக்கீங்களா?சரி ஒரு நல்ல கதையா சொல்லுங்க பாக்கலாம்.

ராமநாராயணன்:கதை என்னங்க கதை?ஆடு,மாடு,அம்மன்னு வெச்சு எடுக்க வேண்டியதுதான்.நீங்க தயாரிப்பாளர் என்பதால் ஒரு வெளிநாட்டு இளைஞன் முன் ஜென்ம ஞாபகம் வந்து சத்த்யமங்கலம் வர்ரான்.அங்கே அவன் போன ஜென்மத்துல விவசாயியா இருந்தான்.அவன் மாமன் பொண்ணு செண்பகம் மறுஜென்மம் எடுத்து அதே கிராமத்துல பொறந்திருக்கா.ஊர் பஞ்சாயத்து தலைவர் ராதாரவி வில்லன்.இளைஞன் வளத்த ஆடு அவனை அடையாளம் கண்டுபிடிச்சு அம்மன் கோயில்ல தீமிதிச்சு...

பில்கேட்ஸ்:ஐயோ..ஐயோ....சகிக்கலை.சகிக்கலை,

ராமநாராயணன்:கதை அப்படித்தாங்க இருக்கும்.ஆனா எடுத்தா நல்ல வரும்.இதுவரை பர்மனன்டா நிழல்கள் ரவியை ஹீரோவா வெச்சு படம் எடுத்திருந்தேன்.இந்த படத்துக்கு பிராதுபட்டை,இல்லைன்னா தேவிட்டுலாயனை ஹீரோவா போட்டுடவேண்டியதுதான்.

பில்கேட்ஸ்:அது யாருங்க பிராதுபட்டைதெவிட்டுலாயன்?பாரதிராஜாவோட படத்து புது கிராமத்து ஹீரோவா?

ஏவிஎம் சரவனன்: (கிசு கிசு குரலில்)David leon,Brad Pitt தான் தெவிட்டு லாயன்,பிராதுபட்டை அப்படிங்கறார்.

பில்கேட்ஸ்:Brad pitt?அவர் சத்தியமங்கலத்துல எத்தனை கோடி கொடுத்தாலும் ஒரு நாளுக்கு மேல் தங்கமாட்டாரே?

ராமநாராயணன்:பரவாயில்லைங்க.ஒரு நாள் கால்ஷீட் கொடுக்க சொல்லுங்க.படத்தை முடிச்சுடலாம்.

பில்கேட்ஸ்:அது எப்படிங்க ஒரு நாள்ல படத்தை முடிப்பீங்க?

ராமநாராயணன்:என்னங்க கஷ்டம்?ஒரு நாள் பூரா நடிக்க சொல்லி படம் பிடிக்க வேண்டியது.அப்புறம் ஏதாவ்து மந்திரவாதி அவரை குரங்கா மாதிட்டான்னு ஒரு ட்விஸ்ட் கொண்டுவந்து குரங்கை வெச்சு மீதி படத்தை முடிச்சுட வேண்டியது.

பில்கேட்ஸ் எழுந்து தலைதெறிக்க ஓடுகிறார்.'ஐயா சாமி நில்லுங்க' என சொல்லி அனைவரும் அவரை துரத்துகின்றனர்

Thursday, July 06, 2006

6.கோடிகளை குவிப்பது எப்படி?

எங்கள் வீட்டுக்கு ஒரு நாள் என் அப்பாவின் பழைய நண்பர் ஒருவர் வந்தார்.நன்றாக பேசி உபசரித்தோம்.கொஞ்ச நேரம் நன்றாக பேசினார்.அதன்பின் தான் ஒரு புது பிசினஸ் ஆரம்பித்திருப்பதாகவும் தன் கூட வந்தால் விவரம் தெரியும் என்றும் சொன்னார்.சரி என போனேன்.

ஒரு பெரிய ஹால்.அதில் ஏராளமான பேர் கூடியிருந்தனர்.எல்லாரையும் புது பிசினஸ் என சொல்லி தான் அழைத்து வந்திருந்தனர்.அதன்பின் தான் தெரிந்தது அது ஆம்வழி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பிரபல கம்பனி தரும் பிசினஸ் என்று.

மீட்டிங் துவங்கியதும் ஆம்வழியில் கோடீஸ்வரரானவர் என ஒருவர் மேடை ஏறினார்.தான் இந்த கம்பனியில் சேர்வதற்கு முன் ஒரு கம்பனியில் வாட்ச்மேனாக இருந்ததை சொன்னார்.இதில் சேர்ந்த பின் இப்போது கோடீஸ்வரராகி விட்டாராம்.ஏதோ டையமண்ட் ஆகிவிட்டாராம்.கோட்,சூட் எல்லாம் போட்டிருந்தார்.

இந்த கம்பனியில் சேர்ந்து எப்படி பணக்காரராகலாம் என ஒரு கணக்கு சொன்னார்.அதாவது 5000 ரூ கட்டி உறுப்பினராக வேண்டும்.அதன்பின் நமக்கு கீழே 4 பேரை சேர்க்க வேண்டும்.உடனே நமக்கு அவர்கள் கட்டிய 20000ல் இருந்து ஒரு தொகை கிடைக்கும்.அதன்பின் அந்த 4 பேரும் தலைக்கு 4 பேரை பிடிக்க வேண்டும்.அந்த தொகையில் நமக்கும் ஒரு பங்கு வரும்.நாம் நியமித்தவர்களுக்கு கீழ் எத்தனை பேர் சேர்கிறார்களோ அத்தனை லாபம் நமக்கு கிடைக்கும்.இந்த முறையின் பெயர் MLM (Multi level marketing)என்பதாகும்.

ஒரு சின்ன கணக்கு போட்டதும் இது போகாத ஊருக்கு வழி என அப்போதே தெரிந்துவிட்டது.எப்படி சொல்கிறேன் என பாருங்கள்.

நான் (1)
எனக்கு கீழே நாலு பேர் (4)
அவர்களுக்கு கீழே 4 (16)
அவர்களுக்கு கீழே 4 (64)

இப்படி போகும் பிரமிட் எங்கே போகிறதென்று பாருங்கள்

1
4
16
64
256
1000
4000
16000
64000 (9வது ரவுண்டில் ஒரு நகரமே இந்த சங்கிலியில் இணையவேண்டும்)
240,000
10 லட்சம்
40 லட்சம்
1.6 கோடி
4 கோடி
16 கோடி
64 கோடி
240 கோடி
1000 கோடி

தியரிட்டகலாக பார்த்தால் 1 ரவுண்டில் ஒரு நபரோடு துவங்கிய ஆட்டம் 17வது ரவுண்டில் முழு உலகத்தில் வந்து நிற்கிறது.இத்தனை நபர்களை உறுப்பினராக சேர்ப்பது காரிய சாத்தியமே இல்லை.இந்த சங்கிலி 12 அல்லது 13வது ரவுண்டை தாண்டி வளராது.

1000 கோடி பேரை நீங்கள் கோடீஸ்வரராவீர்கள் என ஆசை காட்டி சேர்த்து விட்டிருப்பார்கள்.ஆனால் கோடிஸ்வரராபவர்கள் 1000 பேர்தான்.1000 கோடி பேர் சேர்ந்தால் கூட ஆயிரம் பேருக்கு மேல் கோடிஸ்வராராக முடியாது(சின்ன கனக்குதான்.1000 கோடியை ஆயிரத்தால் வகுத்தால் கிடைப்பது 1 கோடி)மீதம் அத்தனை பேருக்கும் கிடைப்பது நெய்மணக்க கிண்டிய திருநெல்வேலி அல்வா தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?இது எப்பேர்ப்பட்ட ஏமாற்று வேலை என்பது தெரிகிறதா?

ஆக பழுதடைந்த,வேலை செய்யவே செய்யாத இந்த பிசினஸ் மாடலை வைத்துக்கொண்டு கோடிஸ்வராவீர்கள்,டையமண்ட்,எமெரால்ட் என சொல்லி மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம்வழியை போல் பல கம்பனிகள் புற்றிசலாய் கிளம்பின.சிம்பயோனிக்,காந்த படுக்கை கம்பனி,ஸ்கைவே என பல கம்பனிகள் கிளம்பி மக்கள் காசை சூறையாடின.

சட்டப்படி இது செல்லுபடியாக்கூடிய மாடல் என்பதை சொல்லியாக வேண்டும்.ஏனென்றால் இவர்கள் விவரமாக ஒரு விஷயத்தை கோர்ட்டில் சொல்லி விட்டார்கள்.அதாவது 5000 ரூபாய் வாங்கிக்கொண்டு அதற்கு பதில் ஒரு கிட்டை மக்களுக்கு கொடுக்கிறோம்.மக்கள் வினியோகஸ்தர்களாக இதில் சேரவேண்டியதில்லை.உபயோகிப்பளராக சேரலாம் என்று.

ஆனால் இவர்கள் மக்களை சேர்ப்பதே "கோடிஸ்வராகலாம்.வாருங்கள்" என்றுதான்.

ஏமாறீதீர்கள் மக்களே.MLM என்பது போகாத ஊருக்கு காட்டும் வழி

Monday, July 03, 2006

5.கண்ணகியும் ஐயப்பனும்

ஐயப்பன் சிலையும் கண்ணகி சிலையும் மீண்டும் தலைப்பு செய்திகளில் அடிபடுகின்றன.வழக்கம் போல் இதிலும் இருதரப்பு அரசியல் புகுந்து விளையாடுகிறது.ஐயப்பன் ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமானவராகவும்,கண்ணகி இன்னொரு தரப்புக்கு சொந்தமானவராகவும் கருதப்பட்டு சொல்லம்புகள் ஏவப்படுகின்றன.

கண்ணகியும் ஐயப்பனும் நம்மவர்கள் என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும்.ஐயப்பன்/ஐயனாரப்பன் என்பவர் ஐயனார் என்ற பெயரில் அனைத்து கிராமங்களுக்கும் காவல் தெய்வமாக நிற்பவர்.ஆதி தமிழரின் குல தெய்வம் அவர்.சாஸ்தா,சாத்தான் என பல பெயர்களில் அழைக்கப்படுபவர்.சாத்தான் குளம் என்பதும் அவர் பெயரில் அமைந்த ஊர்தான்.கேரளர்கள் ஆதிதமிழர்கள் தான்.கேரளாவில் அவர் விஷேஷமாக வழிபடப்படுவதால் அவர் தமிழரின் தாத்தா இல்லை என்றாகிவிடாது.

அதேபோல் கண்ணகி சிலை விவகாரத்தில் அது ஏதோ ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமான சிலை என்பது போல் வாதங்கள் எழுகின்றன.கண்ணகி நம்மவள்.அவள் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்கும் தாய் போன்றவள்.நம் மூதாதை.அவள் திமுகவுக்கு மட்டும் சொந்தமானவள் அல்ல. நளாயினி,சீதை போன்ற எந்த புராணப்பெண்களுக்கும் சற்றும் மாற்று குறைந்தவளல்ல கண்ணகி.சொல்லப்போனால் அவர்களை விட ஒரு படி உயர்வாகத்தான் கண்ணகியை கருத வேண்டி வரும்.பாரதநாட்டின்,தமிழ் பண்பாட்டின் சின்னம் அவள்.அவளை ஒரு அரசியல் இயக்கத்துக்கு மட்டும் சொந்தமானவள் என்று கருதும் மனப்போக்கு மிகதவறானது.

அவள் சிலையை அனியாயமாக உடைத்தவுடன் முதலில் பொங்கி எழுந்திருக்க வேண்டியது இறைநம்பிக்கை உடைய ஆத்திகர்தான்.அதை ஏதோ திமுக,அதிமுக விவகாரம் என ஒதுக்கி விட்டது மகா,மகா தவறு.வலது,இடது,ஆத்திகர்,நாத்திகர் என தமிழ்நாட்டின் மக்கள் அனைவருக்கும் தாய் அவள்.

சரி.இப்போது ஐயப்பன் சிலை விவகாரத்துக்கு போகலாம்.

ஐயனாரப்பன் எனும் ஐயப்பன் ஆதிதமிழரின் தெய்வம்,குல மூதாதை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.இவர் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் இவர் பிறந்ததாக சொல்லப்படும் கதை - விஷ்ணுவுக்கும்,சிவனுக்கும் பிறந்தவர் எனும் கதை வேதத்திலோ புராணத்திலோ கிடையாது.இவர் நண்பர் வாவர் எனும் முஸ்லிம் ஆவார்.இஸ்லாம் இந்தியாவுக்கு வந்தது எப்போது என்பதை ஆராய்ந்தாலே இவர் வாழ்ந்த கால கட்டம் புலப்படும்.அநேகமாக 7 அல்லது 8ம் நூறாண்டில் வாழ்ந்த ஒரு தமிழராக இவர் இருந்திருப்பார்.மூதாதை வழிபாடு என்பது வேறூன்றிய தமிழகத்தில் போற்றத்தகுந்த வாழ்வு வாழ்ந்த இந்தப்பெரியார் அதன்பின் கடவுளாக வழிபடப்படுகிறார்.

ஐயனாராக அவர் வழிபடப்படும் ஆலயங்களுக்கு பெண்கள் தான் அதிக அளவில் சென்று பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.அவர் தமிழக கிராமங்கள் அனைத்துக்கும் கிராம தேவதை.நிலைமை இப்படி இருக்க அவர் பெண்களை பார்க்க மாட்டார்,கன்னி சாமி என்றெல்லாம் சொல்லுவது சுத்தமாக நன்றாக இல்லை.

ஐயப்பன் கோயிலில் எப்படி இப்படி ஒரு சம்பிரதாயம் வந்தது என தெரியவில்லை.12 முதல் 50 வயதான பெண்களை அங்கு அனுமதிக்காதிருப்பது என்ன காரணங்களுக்காக என யோசித்து பார்த்தால் தோன்றுவது கீழ்க்கண்ட காரணம் மட்டுமே

1.மாதவிலக்கு வரும் பருவத்தில் உள்ள பெண்கள் அங்கு வரக்கூடாது

இந்த சம்பிரதாயம் ஏன் தோன்றியது?கடவுளுக்கு பிடிக்காது என்பதாலா?அல்ல.அங்கு விரதம் இருந்து வரும் பக்தர்கள் மனதில் தவறான எண்னங்கள் வரக்கூடாது என்ற காரணம் மட்டுமே இருக்க முடியும்.ஆனால் சற்று யோசித்து பார்த்தால் அந்த பக்தர்கள் 40 நாட்கள் வெளியுலகத்தில் தான் இருக்கின்றனர்.வீட்டில் தம் மனைவி,அலுவலகத்தில் என பெண்களோடு மாலை போட்ட சமயத்திலும் பார்க்காமல் இருப்பதில்லை.37 நாட்கள் பெண்கள் இருக்கும் உலகில் இருந்துவிட்டு 3 நாட்கள் மட்டும் அவர்களை ஒதுக்குவது சரியான வாதமாக தோன்றவில்லை.

மேலும் 12 முதல் 50 வரை இருக்கும் பெண்களை மட்டும் ஒதுக்குவது என்பது மாதவிலக்கு என்ற காரனத்தாலும் இருக்கும் என தோன்றுகிறது.இது இனியும் செல்லுபடியாககூடிய வாதமா என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

ஆத்திகர்கள் சற்று மனம் புண்படாமல் யோசித்து பார்த்தால் வழி வழியாக வந்த சம்பிரதாயம் என்பதை தவிர பெண்களை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்காதிருக்க எந்த காரணமும் இல்லை என்பது புலப்படும்.அவர்கள் நம்மவர்கள்.உரிமையோடு என் சாமியை நான் பார்க்க வேண்டும் என கேட்பவர்களை தடுப்பது நிச்சயம் முறையாகாது.அப்படி கேட்பவர்கள் சொற்பமே எனினும் அவர்கள் உரிமைக்கு நாம் தலை வணங்குதல் தான் முறை.

சம்பிரதாயங்களை உடைத்தால் இந்து மதம் பலவீனப்படும் என்பதை ஏற்க முடியாது.சில சம்பிரதாயங்களை உடைத்தால் இந்து மதம் மேலும் வலுவடையவே செய்யும்.பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு வரலாம் என சட்டம் போட்டால் உடனே பெண்கள் படை எடுத்து வரப்போவதில்லை.சட்டம் என்பதையும் தாண்டி தெய்வ குத்தம் என்ற பயம் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும்.அதை போக்குதல் இந்து மத துறவிகளின் ஒரு பணியாக இருக்க வேண்டும்.அவர்கள் வருகிறார்களோ இல்லையோ சட்டப்படி அதை காரணம் காட்டி அவர்களை தடுத்தல் வேண்டாம்.

இதனால் ஐயப்பன் சாமிகளின் விரதத்துக்கு எந்த பங்கமும் நேராது.மேலும் அவர்கள் நம்பிக்கை வலுவடையவே இது உதவும் என தோன்றுகிறது.

ஐயப்பன் சாமிகளை பற்றி தவறான சில வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.ஐயப்பன் சாமிகள் சிலர் தப்பு செய்தாலும் பெரும்பாலானோர் அந்த 40 நாட்களும் ஒழுக்கமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.தப்பு செய்யும் சிலரும் குற்ற உணர்ச்சியோடு தான் அதை செய்வார்கள்.

ஐயப்பன் பிறப்பை கிண்டலடித்தும் பேசுகிறார்கள்.ஹோமோசெக்ஸ் என்பது பாவம் என்பது முட்டாள்தனமான ஒரு கோட்பாடு.இந்த மடிசஞ்சி கலாச்சாரம் இந்து மதத்தில் எப்போதும் இருந்தது கிடையாது.அரவாணிகள், ஹோமோசெக்ஸுவல்கள், பலதாரமணம் செய்யும் பெண்கள்,களவுமணம்,நிர்வாணம்(public nudity) என காமத்தின் எந்த வகையையும் பாவம் என இந்து மதம் கருதியதில்லை.அரவான் கதை,திரவுபதி,ஐயப்பன்,குந்தி என ஒவ்வொருவருக்கும் அங்கிகாரம் தந்து மாற்றின சேர்க்கையாளருக்கு(hetro sexuals) சமமான அங்கீகாரத்தை இவர்களுக்கும் தந்து தான் வந்துள்ளது.விக்டோரியா காலத்திய இங்கிலாந்தின் நெறிமுறைகளை இந்து மதத்தை அளவிட பயன்படுத்துவது சரியல்ல.