Wednesday, October 18, 2006

16.பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி -II


பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி என எழுதியதற்கு பல்வேறு எதிர்வினைகள். எழுதியதன் அடிப்படையை சரியாக புரிந்துகொண்டு அற்புதமாக கேள்வி எழுப்பிய சன்னாசி, அதை மத ஆதரவு பதிவென்று நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்பிய சிலர் என ஆரம்பக்கட்ட விவாதம் நல்ல சுவாரசியமாக போயிற்று.

மதம் என்ற சொல்லையே இங்கே உபயோகிக்க விரும்பவில்லை. மெடா பிசிக்ஸ் என்ற சொல்லைத்தான் உபயோகப்படுத்த விரும்புகிறேன். மெடா பிசிக்ஸ் என்றால் "பிஸிகல் உலகு தாண்டிய.....(Beyond the physical world)" " என்ற பொருள் வரும். பிஸிகல் உலகம் என்றால் என்ன என்பதை எப்படி மொழிபெயர்ப்பது என தெரியவில்லை. "மனித சக்திக்கு அப்பாற்பட்ட" என சொன்னால் சரியா வருமா?

நாடி ஜோசியம், கடவுள், பேயோட்டுதல், பூதம் எல்லாம் இந்த வகையறாவில் வரும். தத்துவஞானம், விஞ்ஞானம் ஆகிய அனைத்து துறைகளுக்கும் பெடா பிஸிக்ஸ் தான் தாய்.

சிந்தனையின் காலம்(Age of reasoning ) என்றொரு காலம் மெடா பிஸிக்ஸுக்கு எதிராக உருவானது. டெஸ்கார்டிஸ், இம்மானுவேல் காண்ட் ஆகியோர் "பகுத்தாராயும் சிந்தனையின் மகத்துவத்தை வலியுறுத்தினர்". பகுத்தராய்வதே உண்மையை கண்டறியும் வழி என வலியுறுத்தினர். பகுத்தறிவு அறிவை அடைய 'சிறந்த வழி' என சிலரும், அது தான் 'ஒரே வழி' என தீவிர பகுத்தறிவுவாதிகளும் வலியுறுத்தினர். ஸ்பினோசா போன்றோர் பகுத்தறிவின் மூலமே உலகின் உள்ள அனைத்து அறிவையும் ஒரு மனிதன் அடைய முடியும் என உறுதியாக நம்பினர். அதன்பின் சிலகாலம் கழித்து இது காரிய சாத்தியமில்லை என அவர்களே ஒத்துக் கொண்டனர்.

அறிவும் சிந்திக்கும் திறனும் எல்லாருக்கும் சமமாக இருக்கும் என சொல்ல முடியாது. பகுத்தறிவோடு சிந்திக்கும் இருவர் ஒரே பிரச்சனைக்கு நேரெதிரான விடைகளை பகுத்தறிவின் மூலம் அடைவர். ஆக இந்த இரண்டில் எந்த விடை சரியான விடை? மேலும் சிந்தனையின் மூலமே விடைகளை அறிய முடியுமா?

இப்படி சில கேள்விகள் எழுந்ததால் சிந்தனையின் ஆட்சி முடிவுக்கு வந்து ஆராய்ச்சியின் காலம்(Empiricism) என ஒன்று துவங்கியது. அனுபவமே சிறந்த ஆசான், அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவே சிறந்தது என இத்தரப்பினர்(empiricists) வாதிட்டனர். ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் முடிவுகளே சிறந்தவை என இவர்கள் சொன்னார்கள். சிந்தனை செய்து கண்டுபிடிக்க முடியாதவற்றை ஆராய்ச்சி மூலம் கண்டறியலாம். ஒரு விதத்தில் பார்த்தால் ரேஷனலிசத்துக்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை. ஆனால் ஆராய்ச்சி முடிவுகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா/வேண்டாமா போன்ற சர்ச்சைகள் நீடித்தன.

இந்த இருதரப்பும் சண்டை பிடித்துக் கொண்டிருக்க இவர்களை எடுத்து விழுங்க ஜெர்மனியிலிருந்து ஐடியலிசம் என்ற ஒரு சித்தாந்தம் கிளம்பியது. இது "சிந்திப்பதால் தான் பிரபஞ்சமே இருக்கிறது" என ஒரு போடு போட்டது. ரெனே டெஸ்கார்டிஸ் சொன்ன "நான் சிந்திக்கிறேன், அதனால் நான் நானாக இருக்கிறேன்..(I think, Therefore I am..)" என்ற வரி மிக பிரபலமானது. கிட்டத்தட்ட சிந்தனையை, அறிவை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி இது தத்துவ உலகில் ஒரு குழப்பத்தையே உருவாக்கி விட்டது. இதன் உச்சகட்டமாக "நமது சிந்தனை தான் உலகமாகவும், நாம் காணும் பொருட்களாகவும் மாறுகின்றன" என்ற ரேஞ்சுக்கு இது போனதும் இது மதமா, தத்துவமா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு விட்டது.

சிந்தனை தான் அனைத்தையும் உருவாகுகிறது என்றால் அப்போது மனிதன் தோன்றுவதற்கு முன் உருவானவை எல்லாம் என்ன, அவை எப்படி உருவானவை என்ற கேள்வி எழுந்தது. பிரபஞ்சம் தோன்றியதற்கு காரணமே சிந்தனை தான் என்ற பதில் வந்தது. பிரப்ஞ்சம் தோன்றுவதற்கு முன் அதைப்பற்றி சிந்தித்தது யாராக இருக்க முடியும்?

அப்சல்யூட் மைண்ட்(உன்னதமான மனம்) என பதில் சொன்னார் ஹெகெல். இவர் தான் காரல் மார்க்ஸின் குரு. இந்த உன்னதமான மனம் தான் அனைத்து சிந்தனைக்கும், அனைத்து பொருட்கள் தோன்றுவதற்கும் காரணம், உடலும் மனமும் வேறு வேறல்ல, இரண்டுமே ஒன்று தான் என ஒரு அடி அடித்தார். இந்த அப்சல்யூட் மைண்டுக்கும் கடவுளுக்கும் என்ன வித்யாசம் என யோசித்து பார்த்து கடுப்பாயினர் பல தத்துவஞானிகள். பழைய மொந்தையில் புதிய கள் என்பதுபோல் கடவுளை தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் பகுத்தறிவை உட்கார வைத்து விட்டார் ஹெகெல்.

"நாம் காண்பது தான் உண்மை(Real is rational)" என ஹெகல் சொன்னது அப்போதைய பூர்ஷ்வா ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டமாக ஆகிவிட்டது. ராஜா ஆட்சி நிலைத்திருக்க இதை விட நல்ல ஐடியா வேறென்ன? ராஜாக்களை பதவிக்கு வரவைத்தது அப்சல்யூட் மைண்டின் சிந்தனை.அதை எதிர்த்து புரட்சி செய்வது அப்சல்யூட் மைண்டுக்கே எதிரானதில்லையா?

ஹெகலியம் இப்படி தடம் புரண்டதும் ஹெகெலின் சிஷ்யகோடிகளில் சிலர் ஹெகெலையே கடுமையாக விமர்சிக்க துவங்கினர். இடதுசாரி ஹெகலியன்கள் என அழைக்கப்பட்ட சிஷ்யகோடிகள் ஹெகலியத்தை கடவுளற்ற ஒரு தத்துவமாக மாற்றி அமைத்தனர். அவர்களில் முக்கியமானவர் காரல் மார்க்ஸ். அவர் உருவாக்கிய தத்துவம் மார்க்ஸியம் என்ற பாதையில் பயணப்பட்டது.

மார்க்ஸியர்கள் அல்லாத பலரும் ஐடியலிசத்தை கடுமையாக எதிர்த்தனர். வியென்னாவில் கூடி லாஜிகல் பாஸிடிவிசம் என்ற இயக்கத்தை அவர்கள் துவக்கினர். அதன் நோக்கம் ஐடியலிசத்தை ஒழிப்பது.....

(தொடரும்..)