Wednesday, October 18, 2006

16.பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி -II


பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி என எழுதியதற்கு பல்வேறு எதிர்வினைகள். எழுதியதன் அடிப்படையை சரியாக புரிந்துகொண்டு அற்புதமாக கேள்வி எழுப்பிய சன்னாசி, அதை மத ஆதரவு பதிவென்று நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்பிய சிலர் என ஆரம்பக்கட்ட விவாதம் நல்ல சுவாரசியமாக போயிற்று.

மதம் என்ற சொல்லையே இங்கே உபயோகிக்க விரும்பவில்லை. மெடா பிசிக்ஸ் என்ற சொல்லைத்தான் உபயோகப்படுத்த விரும்புகிறேன். மெடா பிசிக்ஸ் என்றால் "பிஸிகல் உலகு தாண்டிய.....(Beyond the physical world)" " என்ற பொருள் வரும். பிஸிகல் உலகம் என்றால் என்ன என்பதை எப்படி மொழிபெயர்ப்பது என தெரியவில்லை. "மனித சக்திக்கு அப்பாற்பட்ட" என சொன்னால் சரியா வருமா?

நாடி ஜோசியம், கடவுள், பேயோட்டுதல், பூதம் எல்லாம் இந்த வகையறாவில் வரும். தத்துவஞானம், விஞ்ஞானம் ஆகிய அனைத்து துறைகளுக்கும் பெடா பிஸிக்ஸ் தான் தாய்.

சிந்தனையின் காலம்(Age of reasoning ) என்றொரு காலம் மெடா பிஸிக்ஸுக்கு எதிராக உருவானது. டெஸ்கார்டிஸ், இம்மானுவேல் காண்ட் ஆகியோர் "பகுத்தாராயும் சிந்தனையின் மகத்துவத்தை வலியுறுத்தினர்". பகுத்தராய்வதே உண்மையை கண்டறியும் வழி என வலியுறுத்தினர். பகுத்தறிவு அறிவை அடைய 'சிறந்த வழி' என சிலரும், அது தான் 'ஒரே வழி' என தீவிர பகுத்தறிவுவாதிகளும் வலியுறுத்தினர். ஸ்பினோசா போன்றோர் பகுத்தறிவின் மூலமே உலகின் உள்ள அனைத்து அறிவையும் ஒரு மனிதன் அடைய முடியும் என உறுதியாக நம்பினர். அதன்பின் சிலகாலம் கழித்து இது காரிய சாத்தியமில்லை என அவர்களே ஒத்துக் கொண்டனர்.

அறிவும் சிந்திக்கும் திறனும் எல்லாருக்கும் சமமாக இருக்கும் என சொல்ல முடியாது. பகுத்தறிவோடு சிந்திக்கும் இருவர் ஒரே பிரச்சனைக்கு நேரெதிரான விடைகளை பகுத்தறிவின் மூலம் அடைவர். ஆக இந்த இரண்டில் எந்த விடை சரியான விடை? மேலும் சிந்தனையின் மூலமே விடைகளை அறிய முடியுமா?

இப்படி சில கேள்விகள் எழுந்ததால் சிந்தனையின் ஆட்சி முடிவுக்கு வந்து ஆராய்ச்சியின் காலம்(Empiricism) என ஒன்று துவங்கியது. அனுபவமே சிறந்த ஆசான், அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவே சிறந்தது என இத்தரப்பினர்(empiricists) வாதிட்டனர். ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் முடிவுகளே சிறந்தவை என இவர்கள் சொன்னார்கள். சிந்தனை செய்து கண்டுபிடிக்க முடியாதவற்றை ஆராய்ச்சி மூலம் கண்டறியலாம். ஒரு விதத்தில் பார்த்தால் ரேஷனலிசத்துக்கும் இதற்கும் பெரிய வித்யாசமில்லை. ஆனால் ஆராய்ச்சி முடிவுகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா/வேண்டாமா போன்ற சர்ச்சைகள் நீடித்தன.

இந்த இருதரப்பும் சண்டை பிடித்துக் கொண்டிருக்க இவர்களை எடுத்து விழுங்க ஜெர்மனியிலிருந்து ஐடியலிசம் என்ற ஒரு சித்தாந்தம் கிளம்பியது. இது "சிந்திப்பதால் தான் பிரபஞ்சமே இருக்கிறது" என ஒரு போடு போட்டது. ரெனே டெஸ்கார்டிஸ் சொன்ன "நான் சிந்திக்கிறேன், அதனால் நான் நானாக இருக்கிறேன்..(I think, Therefore I am..)" என்ற வரி மிக பிரபலமானது. கிட்டத்தட்ட சிந்தனையை, அறிவை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி இது தத்துவ உலகில் ஒரு குழப்பத்தையே உருவாக்கி விட்டது. இதன் உச்சகட்டமாக "நமது சிந்தனை தான் உலகமாகவும், நாம் காணும் பொருட்களாகவும் மாறுகின்றன" என்ற ரேஞ்சுக்கு இது போனதும் இது மதமா, தத்துவமா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு விட்டது.

சிந்தனை தான் அனைத்தையும் உருவாகுகிறது என்றால் அப்போது மனிதன் தோன்றுவதற்கு முன் உருவானவை எல்லாம் என்ன, அவை எப்படி உருவானவை என்ற கேள்வி எழுந்தது. பிரபஞ்சம் தோன்றியதற்கு காரணமே சிந்தனை தான் என்ற பதில் வந்தது. பிரப்ஞ்சம் தோன்றுவதற்கு முன் அதைப்பற்றி சிந்தித்தது யாராக இருக்க முடியும்?

அப்சல்யூட் மைண்ட்(உன்னதமான மனம்) என பதில் சொன்னார் ஹெகெல். இவர் தான் காரல் மார்க்ஸின் குரு. இந்த உன்னதமான மனம் தான் அனைத்து சிந்தனைக்கும், அனைத்து பொருட்கள் தோன்றுவதற்கும் காரணம், உடலும் மனமும் வேறு வேறல்ல, இரண்டுமே ஒன்று தான் என ஒரு அடி அடித்தார். இந்த அப்சல்யூட் மைண்டுக்கும் கடவுளுக்கும் என்ன வித்யாசம் என யோசித்து பார்த்து கடுப்பாயினர் பல தத்துவஞானிகள். பழைய மொந்தையில் புதிய கள் என்பதுபோல் கடவுளை தூக்கி எறிந்துவிட்டு, அந்த இடத்தில் பகுத்தறிவை உட்கார வைத்து விட்டார் ஹெகெல்.

"நாம் காண்பது தான் உண்மை(Real is rational)" என ஹெகல் சொன்னது அப்போதைய பூர்ஷ்வா ஆட்சியாளர்களுக்கு கொண்டாட்டமாக ஆகிவிட்டது. ராஜா ஆட்சி நிலைத்திருக்க இதை விட நல்ல ஐடியா வேறென்ன? ராஜாக்களை பதவிக்கு வரவைத்தது அப்சல்யூட் மைண்டின் சிந்தனை.அதை எதிர்த்து புரட்சி செய்வது அப்சல்யூட் மைண்டுக்கே எதிரானதில்லையா?

ஹெகலியம் இப்படி தடம் புரண்டதும் ஹெகெலின் சிஷ்யகோடிகளில் சிலர் ஹெகெலையே கடுமையாக விமர்சிக்க துவங்கினர். இடதுசாரி ஹெகலியன்கள் என அழைக்கப்பட்ட சிஷ்யகோடிகள் ஹெகலியத்தை கடவுளற்ற ஒரு தத்துவமாக மாற்றி அமைத்தனர். அவர்களில் முக்கியமானவர் காரல் மார்க்ஸ். அவர் உருவாக்கிய தத்துவம் மார்க்ஸியம் என்ற பாதையில் பயணப்பட்டது.

மார்க்ஸியர்கள் அல்லாத பலரும் ஐடியலிசத்தை கடுமையாக எதிர்த்தனர். வியென்னாவில் கூடி லாஜிகல் பாஸிடிவிசம் என்ற இயக்கத்தை அவர்கள் துவக்கினர். அதன் நோக்கம் ஐடியலிசத்தை ஒழிப்பது.....

(தொடரும்..)

22 Comments:

ENNAR said...

செல்வன்
நன்றாக போகிறது அடுத்த பதிவையும் போடுங்கள் பிறகு நான் எழுதுகிறேன். நமது சித்தர்களுக்குப்பிறகுதான் மற்ற எத்தர்கள் என்பது எனது கொள்கை. ஆரியப்பட்டா எப்படி கண்டு பிடித்தார் அல்லது சொன்னார். பார்ப்போம்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மறுபடியும் எனக்கு இந்தப் பதிவில் பல விஷயங்களில் உடன்பாடு இல்லை. நீங்கள் எங்கேயோ தேவை இல்லாமல் எதை எதையோ தொடர்புபடுத்தி பேசுவது போல எனக்குத் தோன்றுகிறது.

///
அறிவும் சிந்திக்கும் திறனும் எல்லாருக்கும் சமமாக இருக்கும் என சொல்ல முடியாது. பகுத்தறிவோடு சிந்திக்கும் இருவர் ஒரே பிரச்சனைக்கு நேரெதிரான விடைகளை பகுத்தறிவின் மூலம் அடைவர். ஆக இந்த இரண்டில் எந்த விடை சரியான விடை? மேலும் சிந்தனையின் மூலமே விடைகளை அறிய முடியுமா?
///

எதற்காக சரி தவறு என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்? இரண்டையுமே சரி என்று ஏன் எடுக்கக் கூடாது. இருவரும் இரு வேறு முடிவுக்கு வந்தால் இரண்டுமே யாருக்கும் மனதாலோ உடலாலோ தீங்கு செய்யாத வண்ணம் அமைந்தால் இரண்டுமே சரிதான். இரண்டாலும் தீங்கு நேர்ந்தால் இரண்டுமே சரி அல்ல. இதில் மறுபடியும் ஆத்திகத்தின் ஈகோதான் எனக்குத் தெரிகிறது. எனக்குத் தான் எல்லாம் தெரியும் ஏனென்றால் என் மக்கள் தான் கடவுளை உணர்தவர்கள் என்பது இந்து முஸ்லீம் கிறிஸ்துவர் என்று எல்லா தரப்பினரும் நினைப்பது தான்.

///
ஆனால் ஆராய்ச்சி முடிவுகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா/வேண்டாமா போன்ற சர்ச்சைகள் நீடித்தன.
///

ஆராய்ச்சி முடிவுகள் எப்படி பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியும்? இது மதம் சம்பந்தமான ஆத்திகம் இல்லை உணர்ந்து நம்பிக்கையால் சொல்வதற்கு எல்லாம். ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தால் கண்டிப்பாக எல்லோருக்கும் விளக்க முடியும். நேரம் பிடிக்கலாம் ஆனால் கண்டிப்பாக விளக்க முடியும். நேரம் கிடைக்கவில்லை என்று புரிந்து கொள்ளாமல் விட்டால் அது அறிவியலின் தவறு இல்லை. மீண்டும் சொல்கிறேன் அறிவியல் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது அல்ல இது factual ஆனது.

///
நான் சிந்திக்கிறேன், அதனால் நான் நானாக இருக்கிறேன்..(I think, Therefore I am..)"
///

ஐயா இது அறிவியல் அல்ல அறிவியலில் இருக்கும் சில மதவாதிகளின் நம்பிக்கை இதை எல்லாம் அறிவியல் புரிந்த யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.

Tao of physics என்பதெல்லாம் சிலரின் அறிவியலில் ஆன்மீகம் சம்பந்தமான தேடல்.

இதையும் factual அறிவியலையும் குழப்ப வேண்டாம். என்னுடைய ஆன்மீகம் அறிவியலில் கூட இது இப்படி இருக்கலாமோ என்றெல்லாம் கேள்விகள் மட்டுமே எழுப்பப் படுகிறது அது எல்லாம் நிரூபிக்கப் படும் வரை வெறும் வார்த்தைகளே. ஆகவே அறிவியல் என்பதும் இதுவும் வேறு.

வலைப் பூ பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் இதெல்லாம் அறிவியலை வைத்துக் கொண்டு சிலர் அடிக்கும் ஜல்லி அவ்வளவே.

///
சிந்தனை தான் அனைத்தையும் உருவாகுகிறது என்றால் அப்போது மனிதன் தோன்றுவதற்கு முன் உருவானவை எல்லாம் என்ன, அவை எப்படி உருவானவை என்ற கேள்வி எழுந்தது. பிரபஞ்சம் தோன்றியதற்கு காரணமே சிந்தனை தான் என்ற பதில் வந்தது. பிரப்ஞ்சம் தோன்றுவதற்கு முன் அதைப்பற்றி சிந்தித்தது யாராக இருக்க முடியும்?
///

இதெல்லாம் சிலரின் அறிவியல் ஜல்லிகள். இதை எல்லாம் அறிவியல் என்கிறீர்களே புரியவில்லை.

முதல் பதிவில் ஆத்திகம் அறிவியல் மதம் நாத்திகம் என்பது தெளிவு படுத்தப் படாமல் சொல்லப் பட்டது.

இப்பொழுது அறிவியலில் ஒரு சிறிய துறை ஒன்றை எடுத்துக் கொண்டு இதையே அறிவியல் என்பது போல சொல்லப் பட்டிருக்கிறது.

கால்கரி சிவா said...

பயங்கர ஹெவியா போகுதே. குமரன் எண்ணத்திற்கும் செல்வனுக்கும் சபாஷ் சரியான பின்னூட்ட பரிமாற்றம்.
இதை முடிந்த பிறகு ஏதாவது புரியுதா என பார்ப்போம்

Unknown said...

//எதற்காக சரி தவறு என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்? இரண்டையுமே சரி என்று ஏன் எடுக்கக் கூடாது. இருவரும் இரு வேறு முடிவுக்கு வந்தால் இரண்டுமே யாருக்கும் மனதாலோ உடலாலோ தீங்கு செய்யாத வண்ணம் அமைந்தால் இரண்டுமே சரிதான். இரண்டாலும் தீங்கு நேர்ந்தால் இரண்டுமே சரி அல்ல.//

இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும் குமரன். செயல்படுத்துவது எப்படி?சரி/தவறு என கண்டுபிடிக்காவிட்டால் முடிவெடுப்பது எப்படி?

///ஆராய்ச்சி முடிவுகள் எப்படி பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியும்? ///

உங்களால் புரிந்துகொள்ள முடியாத ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் உங்கள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது தானே? உலகில் உள்ள அனைத்து ஆராய்ச்சிகளையும் பகுத்தாராயும் ஞானம் உங்களுக்கு இருக்கிறது என்கிறீர்களா?

//மீண்டும் சொல்கிறேன் அறிவியல் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது அல்ல இது fஅcடுஅல் ஆனது.//

அறிவியலின் மீது பலத்த நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்:-)

ஆனால் நீங்கள் சொல்வதை ஒத்துகொள்கிறேன். மறுக்கவில்லை.

///ஐயா இது அறிவியல் அல்ல அறிவியலில் இருக்கும் சில மதவாதிகளின் நம்பிக்கை இதை எல்லாம் அறிவியல் புரிந்த யாரும் ஏற்றுக் கொள்வதில்லை.///

இது அறிவியல் அல்ல. அறிவியலின் அடிப்படையை விளக்கும் எபிஸ்டமாலஜி என்ற தத்துவ துறைகளை பற்றிய கட்டுரை.

//இப்பொழுது அறிவியலில் ஒரு சிறிய துறை ஒன்றை எடுத்துக் கொண்டு இதையே அறிவியல் என்பது போல சொல்லப் பட்டிருக்கிறது. //

இது அறிவியல் அல்ல. தத்துவம்.

Philosophy is different from science. Philosohers are not scientists.

Unknown said...

என்னார் ஐயா

நன்றி.ஆர்யபட்டாவை பற்றி எனக்கு தெரியாது. நீங்கள் எழுதுங்கள்.

கால்கரி சிவா

இது கொஞ்சம் சுவாரசிய குறைவான தலைப்புதான்:-))ஆனால் முடிந்தவரை போரடிக்காமல் எழுத முயல்கிறேன்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

மறுபடியும் சின்ன விளக்கம்.

டேட்டிங் போறது சரியா தப்பா என்று கேட்டால் சரி என்று ஒருவரின் பகுத்தறிவு சரி இன்னொருவரின் பகுத்தறிவு தவறு என்று சொன்னால் இரண்டுமே சரிதான். ஆனால் அடுத்தவரின் பார்வை தவறு என்று நினைத்தால் தவறு. சிவசேனை செய்வதைப் போல அது.

அது போல இருந்து விட்டால் நல்லது இல்லை என்றால் பிரச்சனைகள் தான். அதைத் தான் சொல்ல வந்தேன்.

///
உங்களால் புரிந்துகொள்ள முடியாத ஆராய்ச்சி முடிவுகள் எல்லாம் உங்கள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது தானே?
///

இல்லை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் எப்பொழுது வேணுடுமானாலும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் உண்டு என்ன நேரம் பிடிக்கும் அவ்வளவுதான். Realtivity பற்றி தெரியவில்லை என்றால் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் ஆன்மீகம் என்பது அது போல அல்ல. என்னால் நேரம் ஒதுக்கினால் புரிந்து கொள்ளவும் முடியாது.

மேலும் இது இவர்களுக்கு என்று யாரையும் ஒதுக்கி வைப்பதும் இதில் இருக்காது.

Unknown said...

//இல்லை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் எப்பொழுது வேணுடுமானாலும் உங்களால் புரிந்து கொள்ள முடியும். அதற்கான வாய்ப்புகள் உண்டு என்ன நேரம் பிடிக்கும் அவ்வளவுதான். Realtivity பற்றி தெரியவில்லை என்றால் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் புரிந்து கொள்ள முடியும் //

என்னங்க குமரன், இத்தனை சாதாரணமா ரிலேடிவிட்டி பற்றி புரிந்து கொள்ள முடியும் என்று சொல்லிவிட்டீரகள்?மேலோட்டமா ரிலேடிவிட்டி பற்றி தெரிந்துகொள்வது சாத்தியமே.ஆனால் பவுதீக ஜர்னலில் வெளியான கட்டுரையை அலசி ஆராய்ந்து மதிப்பிடு செய்ய அந்த மேலோட்டமான ஞானம் போதாது. குறைந்தது பவுதீகத்தில் முனைவர் பட்டம் வாங்கியிருந்தால் தான் சாத்தியம்.

இப்படி உலகில் இருப்பது எத்தனை கோடி துறைகள்?அனைத்திலும் ஒருவன் ஞானம் பெற்று அத்துறை சார்ந்த கட்டுரைகளை மதிப்புடு செய்தல் இயலுமா?:-))

பகுத்தறிவுக்கு எல்லை உண்டு என்பது இதனால் தான். ஒரு எல்லைக்கு மேல் அது வேலை செய்யாது:-))

Unknown said...

CT,Nathigan

Thanks.

Nathigan,
I am a aathigan.Hence I posted piLLaiyaar photos.

Thanks
selvan

Anonymous said...

பொதுவாக நான் அறிய இந்துக்களில் பெரும்பான்மையானோர் தங்களுக்குத்தான் கடவுள் உண்மையை சொன்னார் மற்றதெல்லாம் பொய் என்று சொல்வதில்லை. எனவே இந்துக்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர் எனபொத்தாம் பொதுவாக சொல்வது சரியல்ல. பின்னது இரண்டும் ஆபிரகாமிய மதங்கள். அவைகள் இரண்டுமே தாங்கள் சொல்வதுதான் சரி என்கிற பிடிவாதம் உடையவை. 'அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு' என்கிற பொது வழக்கு முதல், 'எம்மதமும் சம்மதம்' என்கிற காலண்டர் வாசகம் முதல் 'ஈஸ்வர அல்லா தேரே நாம்' 'ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி' வரை இந்துக்கள் வழிபடு முறைகள் பலவானாலும் சத்தியம் ஒன்று அதன் பரிமாணங்கள் எண்ணிலி என்பதாக பார்வை கொண்டவர்கள். கடவுள் சத்தியம் என்பதை மாற்றி சத்தியமே கடவுள் என்றார் மகாத்மா. அதற்கு வேத ஆதாரமும் காட்டி தன்னை சநாதனி ஹிந்து என்றும் அறிவித்தார். பொதுவாக அறிவியலையே ஒரு ஆன்மிகத்தேடலாக கொள்ள முனைந்தவர்களுக்கு தெய்வம் தேவையற்றதாக இருக்கலாம். அல்லது மாணிக்கவாசக பெருமான் போல பிரபஞ்சத்தை சிவமயமாக காணும் பேறு பெற்றவர்களுக்கு அறிவியல் தகவல்கள் தேவையற்றதாக இருக்கலாம். அண்மையில் திமிங்கில பரிணாமத்தை ஆராய்ந்த ஒரு உயிரியலாளர் தமது வாழ்க்கையை விவரித்தார். அவர் அமெரிக்காவில் அடிப்படைவாத சமுதாயத்தில் பிறந்தவர். பரிணாமம் ஒரு taboo. ஆனால் பின்னாளில் திமிங்கிலத்தின் பரிணாமத்தினை தெளிவாகக் காட்டிடும் தொல்லெச்சங்களை (fossils) அவர் கண்டடைகிறார். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கையை அர்ப்பணித்து அப்பரிணாம வளர்ச்சியை பாகிஸ்தானிலும், பாரதத்திலும் எகிப்திலும் தேடி தேடி reconstruct செய்து காட்டுகிறார். அவர் கூறுகிறார்: "இது உண்மையிலேயே ஒரு ஆன்மிக அனுபவம்!" திருமூலர் கூறினார்: "முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்" என. மேற்குலகிலும் யாராவது ஆன்மிக பெரியவர்கள் "ஏழுநாளில் படைத்தனன் என்பர்கள் எத்தர்கள்" என்று சொல்லியிருந்திருக்கலாம். ஆபிரகாமிய மதங்களில் (யூதம் நீங்கலாக) கட்டி வைத்து எரித்திருப்பார்கள். பெண்டிக்ட் அதை நியாயப்படுத்த வார்த்தை சிலம்பம் ஆடியிருப்பார். பொதுவாக அறிவியல்-ஆன்மிகம்/ஆத்திகம்-நாத்திகம் போன்ற binary மேற்கத்திய பிளவு, நாம் அதனை மீறி செல்வது அவசியம்.
செல்வன் போன்றவர்களின் பதிவுகள் அதற்கு துணை செய்கின்றன என்கிற முறையிலும் அப்பதிவுகளின் தனிப்பட்ட அழகிய நடைக்காகவும் நன்றி.

Unknown said...

அரவிந்தன் நீலகண்டன்,

மூத்த பதிவரான நீங்கள் என் பதிவை வாழ்த்தியதற்கு என் மனமார்ந்த நன்றி.

ஆத்திகம்/விஞ்ஞானம் என்பதை நான் ஒன்றாக பார்ப்பதில்லை. நான் கும்பிடும் கடவுள் எந்த விதத்திலும் என் விஞ்ஞான நம்பிக்கைகளுக்கு முரணாகவோ, தடையாகவோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆன்மிகம் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சரிபாதி அமெரிக்கர்கள் லிபரல்கள்.மதம் என்பது அவர்களை பொறுத்தவ்ரை வேப்பங்காய்.ஆனால் மீதமுள்ள அமெரிக்கர்கள் கன்சர்வேடிவ் எனும் பிரிவினர். அவர்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியாது.ஆனால் இப்போதெல்லாம் அவர்களோடு நல்ல நட்புறவு வந்துவிட்டது.

Unknown said...

14

Unknown said...

நீலகண்டன்,

இந்து மதத்தில் உள்ள டைவர்சிடி தான் "சத்யம் ஏகம் விப்ரா" எனும் கோட்பாட்டுக்கு காரணமாக இருக்குமோ என தோன்றுகிறது. இக்கோட்பாடு இல்லாது இந்து மதத்தில் மதநல்லிணக்கம் சாத்தியம் அல்ல என தோன்றுகிறது. ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் அண்ணன் சைவனாகவும், தம்பி வைணவனாகவும், அப்பா சாக்தனாகவும் இருக்க இந்த கோட்பாடு தான் உதவியிருக்கிறது. இந்து மத பிரிவுகளை ஒருங்கிணைத்த நூலிழை செக்யூலரிசமே

நன்றி
செல்வன்

Unknown said...

naathigan,

It's not possible to be scientificlly at home.

Science wont tell you whom to marry, whom to date, whether to donate money to a charity or not and whether what we do is right or wrong.

Science is just Science.

K.R.அதியமான் said...

Subject : God, dharma, human logic, astrology and life ; Maughum's Razor's Edge, etc

To : Thiru Sujatha Rangarajan

Dear Sir,

Hindu concepts of transmigration of soul, rebirth can be used to justify or rationalise the unfairness of life on earth. God' dharma or ethics is incomprehensible to our human logic. Good people suffer needlessly while evil people flourish and die peacefully. so it seems. In Astrology, the fifth house denotes prevoius births or purva punya sthanam. And our current life and events are based on tallying the good/bad things we had done in prevoius births.

Only if we can understand or accept such logic can we justify or rationalise life's contradictions and unfairness.

Hope you must have read Razor's Edge by your favourite author Somerset Maughaum, based on Ramanar and India. It is his most important work. Pls re-read Larry's
experiences and inferences again. About Godliness and human life and soul.

Also R.K.Narayan's auto biography "My Days" and semi-autobiographical novel "English Teacher" are important books about tranmigration of soul. he says he established contact with his late wife (who passed away in 1939) ; and he is not unscientific.

Astrology, as in weekly predictions or sun-signs are generalised and can be quite inaccurate. Only a correct interpretation of horoscope can give accurate results and analysis. The character of an individual, his strenghts and weakness, biases , health, appearance,etc can be predicted accurately in our Indian
methods. Pls try to meet Thiru.A.M.R of Kumudam jodhidam for a discussion. Or you can enquire about his merits and accomplishments with your contacts at Kumudam office, etc. You may be in for a surprise.

I am from a DK background, but now an ametuer astrologer ; and can understand many facets or life
and humans better now.

more later

Sincerely Yours
Athiyaman
Chennai

ஓகை said...

செல்வன், நல்ல பதிவு.

இறை நம்பிக்கை மற்றும் மதக் கொட்பாடுகள் மேல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது.

நம்பிக்கையின்மை சிந்தனையை தடை செய்வதில்லை.
அங்கு ஒரு திறந்த மனம் இருக்கிறது.
உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் மனம்.
உண்மைகளுக்காக காத்திருக்கும் மனம்.
ஒவ்வாமை அப்படி இல்லை.
அறிவியல் சொல்லாததை உருமாற்றி உள்வாங்கிக் கொள்கிறது.
அறிவியல் சொல்லும் உண்மைகளை ஏற்று ஏற்று
பலப்பட்டுப் போன மனம்,
அறிவியல் சொல்லாத உண்மைகளை பொய்களுக்கான
பெரிய வட்டத்தில் தள்ளிவிடுகிறது.
உண்மைகளுக்கான சிறு வட்டமும்
அது தவிர்த்ததான பெருவட்டமுமே கொண்ட நம் அறிவில்
அந்தப் பெரு வட்டத்தைப் பொய்களுக்கானது மட்டுமே
என்று சொல்ல நான் தயாரில்லை.

Anonymous said...

Hi folks this is Venkat,

I want to add few things here for those who do not know(sorry i presume) much about relativity.

//Realtivity பற்றி தெரியவில்லை என்றால் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் ஆன்மீகம் என்பது அது போல அல்ல. என்னால் நேரம் ஒதுக்கினால் புரிந்து கொள்ளவும் முடியாது//

First,it is not so easy to get comprehensive understanding in relativity as you think.It is as difficult as spiritual practice.

The subject is divided into two parts as (a) special theory of relativity which is a subset of (b)The general theory of relativity.

A graduate(physics/Engg)student with reasonable depth of knowledge can get some understanding in special theory of relativity which deals with length contraction, time dilation,mass energy equivalance and such simple things.

But the general theory of relativity deals with the following mind boggling things such as curved space(minimum distance between two points in space is not strait line but curved as opposed to the so called cartesian view),time warp, event horizon and related singularity(spiritual equivalent is pralaya)which are not easy to understand even for a PhD. So far, there are only a dozen or so who have undertood completely the general theory of relativity which is in a sense is mystically equivalant to spiritualist term of (nearly) realisation of truth.

Eienstien himself once said that all our science are childlike.

Once we come from gross to subtle, that is ultimately to singularity we almost reach a point where there is no more argument of rationalism or otherwise.

Thanks.

Venkat.

K.R.அதியமான் said...

To : Thiru Sujatha

Dear Sir,

Panchaboohtams can be compared to the
different states of matter as :

Nilam : solids

Neer : Liquids

Kattru : gas

Ahayam : vacuum/space (or the fourth state of matter : plasma ?)

Nerupu : heat energy or photons, etc which gets released or absorbed when matter converts from one state to another.

Thanks & regards
Athiyaman

K.R.அதியமான் said...

Subject: yin-yang & siva-sakthi
To : Thiru Sujatha

Dear Sir,

The booklet "Oru Vingana Parvayilirundhu" (1984) is
important and lucidly written. I consider it as one of
your best works.

Only one matter has not been mentioned. Dual nature
of particles (uncertainity principle) which tells about wave/matter state or nature of particles ; can be co-related to our Siva Sakthi (and ardhanareeshwarar) ; matter becomes energy and vice versa ; sakthi (energy) becomes sivam (matter) ; and sivasakthi is the nature of universe. (..movie :
Thiruvilayadal and the famous dual between sivam and sakthi)

All things and actions in this universe are co-related in distance and time. Saravam Brahma mayam. For e.g a wave in a beach is the net result of all forces and
parameters of ocean and land ,wind and time.

Astrological perspective too can be fit into this view.
The postions and movements of planets affect and control life events.

Thanks & regards
Athiyaman

-----------------------

Aquarian age had dawned as per western astrology. Democracy, concepts of equality and fraternity ; technological development and telecommunications,
sending aid and care packages, disintegeration of family values are some of the symptoms.

Fusion music and cross cultural exchanges are flourishing as never before.

I am an ametuer astrologer and can see patterns in human lives and characters. It may sound unscientific but it helps me enormously.
--------------

Unknown said...

அதியமான்

உங்கள் மடல்கள் மற்றும் பதிவுகள் மிக சிறப்பானவையாக உள்ளன.பொருட்களின் இரட்டை நிலையை(டூவாலிடி) சிவ சக்தியுடன் ஒப்பிட்டது நன்று.சிவம் என்பது பொருள்.சக்தி என்பது ஆற்றல்.ஆற்றல் இல்லாமல் பொருள் இல்லை.பொருள் இல்லாமல் ஆற்றல் இல்லை.இரண்டும் ஒன்றீலிருந்து ஒன்றாகவும் மாறும்."சக்தியில்லையேல் சிவமில்லை" என்பதை இந்த அடிப்படையில் புரிந்துகொள்ளலாம்.

நன்றி

Unknown said...

ஓகை

நன்றி. "மேலுலகத்துக்கு போவது எப்படி என்று சொல்வது மெய்ஞ்ஞானம்.மேலுலகம் எப்படி இயங்கும் என்பதை சொல்வது விஞ்ஞானம்" என புரிந்து கொண்டால் இரண்டையும் போட்டு குழப்பி கொள்ள வேண்டியதில்லை.

K.R.அதியமான் said...

Selvan,

i forgot add about the Taoist concepts of yin-yang which is equivalent to our siva-sakthi ;
or 1 and 0 of binary maths used in all computers, etc.

Hope you have read the 1977 classic
Tao of Physics by Fritjof Capra.

and the recent book Kadavul by sujtha is also a good read.

Athiyaman

K.R.அதியமான் said...

You can buy Sujatha's Oru Vingana Paarvayilirinthu (based on Tao of Physics) e-book from :

writersujatha.com

http://www.writersujatha.com/sample-PDF/S_E-oruvignanapaarvai.pdf